Monday, 17 February 2014

நாவல்கள் வகைகள்

          துப்பறியும் நாவல்
                              மேலை நாட்டில் செல்வாக்குப்பெற்ற, ரெயினால்ட்ஸ், ஆர்தர் கானன்டாயில் போன்றோரின் நாவல்களைப் பின்பற்றிப் பல துப்பறியும் புதினங்கள் எழுதப்பட்டன. துப்பறியும் புதினம் எழுதுபவர்களில் ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார், ஜே.ஆர். ரங்கராஜு ஆகியோர் சிறப்புடையவர்கள்.
ஆவலைத் தூண்டுவதாகவும், எதிர்பார்ப்பை ஏற்படுத்ததுவதாகவும் இந்நாவல்கள் அமையும்.  தமிழ்வானன், பிடி.சாமி, சுஜாதா, பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா ஆகியோர் துப்பறியும் நாவல் எழுதிப் புகழ்பெற்றவர்களாவர். இவர்களுள் இராஜேஸ்குமார் அவர்களின் துப்பறியும் நாவல்களைத் தற்போது தொலைக்காட்சிகளில் குறும்படங்களாக எடுத்து ஒளிபரப்பி வருகிறார்கள்.
சமூக நாவல்
                                    காலந்தோறும் மக்கள் எதிர்கொண்ட சிக்கல்களை எதிரொலிப்பன சமூகப் புதினங்களாகும்.  கொத்தமங்கலம் சுப்பு, ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, மு.வரதராசன், அகிலன் போன்றோர் சமூகப் புதினங்களால் மக்கள் மனதைக் கவர்ந்தவர்களாவர். கல்கியின் அலையோசை, தியாகபூமி, மகுடபதி ஆகிய நாவல்களும்,  மு.வரதராசன் அவர்களின் கயமை, அகல்விளக்கு, நெஞ்சில் ஒரு முள், கரித்துண்டு ஆகிய நாவல்களும் சமூக நாவல்களுக்குத் தக்க சான்றுகளாகு
வரலாற்று நாவல்
                             நேற்றைய செய்தியே இன்றைய வரலாறு என்பர். தமிழக வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழ்வரலாற்று நாவல்கள் தோன்றின. கல்கி, சாண்டில்யன், விக்கிரமன், ஜெகசிற்பியன், மு.மேத்தா ஆகியோர் வரலாற்று நாவல்களால் புகழ்பெற்றோராவர்.  வரலாற்றுப் புதினத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் கல்கி ஆவார். கல்கி எழுதிப் புகழ்பெற்ற வரலாற்றுப் புதினங்களுள் பார்த்திபன் கனவு, சிவகாமியின்  சபதம், பொன்னியின் செல்வன் ஆகியன குறிப்பிடத்தக்கனவாகும்.
மொழிபெயர்ப்பு நாவல்
                            சிறந்த பிறமொழி நாவல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பதை மொழிபெயர்ப்பு நாவல் என அழைத்தனர். காண்டேகரின் மராட்டிய நாவலை கா.ஸ்ரீஸ்ரீ அவர்கள் மொழிபெயர்த்தார், ஒரிய மொழிக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காக தமிழ்நாடன் சாகித்திய அகாதமி விருதுபெற்றுள்ளார். இந்த ஆராய்சிக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள ”எரியும் பனிக்காடும்” ஒரு மொழி பெயர்ப்பு நாவலே சமூக அக்கறையுடன் எழுதப்பட்டிருப்பதால் இதனை சமூக நாவல் எனவும் கூறலாம். ஒரு வகையான வரலாற்றையும் இந்த நாவல் பதிவு செய்துள்ளது இதனை வரலாறு சார்ந்த நாவலாகவும் நாம் எடுத்துக்கொள்ளலாம்
தழுவல் நாவல்
                          இவ்வகைப் நாவல்கள் தமிழில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. டால்ஸ்டாயின் அன்னாகரினாவைத் தழுவி நாராயண துரைக்கண்ணன் சீமாட்டி கார்த்திகாயினி என்ற நாவலை எழுதினார். ரெயினால்சின் நாவலைத் தழுவி மறைமலையடிகள் குமுதவல்லி என்ற நாவலை எழுதினார்.
வட்டார நாவல்
                         அந்தந்த வட்டாரப் பேச்சுவழக்குகளையும், பழக்கவழக்கங்களையும் கொண்டு எழுதப்படுவன வட்டார நாவல்களாகும்.சூரிய காந்தனின் “மானாவாரி மனிதர்கள்”, தோப்பில் முகமது மீரானின் “சாய்வு நாற்காலி” ஆகிய நாவல்கள் தக்க சான்றுகளாகும்.
தமிழ் மொழியின் புதின வரலாற்றை மூன்று காலக் கட்டங்களாகப் பகுப்பர். அவை பின்வருமாறு.
முதற் காலக் கட்டம் (1910க்கு முன்)
                          மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பண்டித எஸ். எம். நடேச சாஸ்திரி, பி. ஆர். ராஜமையர், சு.வை. குருசாமி சர்மா, அ.மாதவையா ஆகியோர் முதற் காலக்கட்டத் தமிழ் நாவல் படைப்பாளிகள் ஆவர்.
இரண்டாம் காலக் கட்டம் (1910-1940)
                         இக்காலக் கட்டத்தில் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார், ஆரணி குப்புசாமி முதலியார், ஜே.ஆர். ரங்கராஜு, எஸ். ஜி. ராமானுஜலு நாயுடு, வை.மு. கோதைநாயகி அம்மாள் முதலியோர் நாவல்கள் படைத்தனர்.
மூன்றாம் காலக் கட்டம் (1940 முதல் இன்று வரை)
                         இக்காலக் கட்டம் கல்கியிலிருந்து தொடங்குகிறது. அகிலன், க. நா. சுப்பிரமணியம், தி. ஜானகிராமன், டாக்டர். மு.வ., அறிஞர் அண்ணா, நா.பார்த்தசாரதி, சுந்தரராமசாமி, ஜெயகாந்தன், கு.ராஜவேலு, லக்ஷ்மி, கலைஞர் கருணாநிதி, விக்கிரமன், இந்திரா பார்த்தசாரதி, நீல. பத்மநாபன், பாலகுமாரன், குமுதினி, அநுத்தமா, ராஜம் கிருஷ்ணன், வாஸந்தி, விமலாரமணி, சிவசங்கரி, இந்துமதி, கிருத்திகா, பாமா, அநுராதா ரமணன், சாண்டில்யன், கோவை. மணிசேகரன் முதலியோர் இக்காலக் கட்ட நாவலாசிரியர்கள் சிலர் ஆவர்.
                       செய்யுள் நூல்களை எல்லாரும் படிக்க முடியாது என்பதை உணர்ந்து, உரைநடை வாயிலாக நல்ல கருத்துகளை உணர்த்த வேண்டும் என்று வேதநாயகம் பிள்ளை ஆர்வம் கொண்டார். அவர் நாவல்கள் வாயிலாகத் தாம் உணர்த்த விரும்பியவற்றைப் படைக்க முன் வந்தார். முன்பே கூறியது போல் இவர் முதல் தமிழ் நாவலை எழுதிய பெருமைக்குரியவர் ஆவார்.
மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை
                       இவர் தமிழ் நாவலின் தந்தை என அழைக்கப்படுபவர். இவர் தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தையும், சுகுண சுந்தரி கதையையும் படைத்தவர். பிரதாப முதலியார் சரித்திரம் அற்புதச் சம்பவங்கள் நிறைந்த ஒன்று. சத்தியபுரி என்னும் கிராமத்திலுள்ள நிலமானியக் குடும்பங்கள் இரண்டின் இணைவு பற்றியது அதன் கதைக் கரு. சாதாரணக் குடும்பக் கதைதான் இது என்றாலும், இடம் பெறுகின்ற நிகழ்ச்சிகள், திடீர் சம்பவங்கள் போன்ற பல அம்சங்களால் துப்பறியும் கதை போலவும், தலைவி ஞானாம்பாள் மாறுவேடத்தில் சென்று அரசாளுதல் முதலியன செய்தலால் வரலாற்றுப் புதினம் போலவும், கிளைக்கதைகள் நீதிக் கருத்துகள் இடம்பெறுதலால் நீதிக்கதை போலவும் அமைந்துள்ளது.
                     சுகுணசுந்தரி கதை, கதைத்தலைவியை ஓர் அரசன் கவர்ந்து செல்கிறான். தலைவி வழியில் கன்னி மாடத்தில் புகுந்து கொள்கிறாள். அரசன் தேடிக் கண்டுபிடிக்கிறான். அதற்குள் அந்த அரசனுடைய ஆட்சியை அமைச்சன் கைப்பற்ற முயல்கிறான். போராட்டங்கள் வளர்கின்றன. இவரின் முதல் நாவல் சமூக நாவலுக்கு வித்திட்டது என்றால், இவரின் அடுத்த நாவலான சுகுண சுந்தரி கதை வரலாற்று நாவலுக்கு அடிகோலியது எனலாம்.
பண்டித எஸ்.எம். நடேச சாஸ்திரி
                        இவர், தானவன், தீனதயாளு, மதிகெட்ட மனைவி, திக்கற்ற இரு குழந்தைகள், மாமி கொலுவிருக்கை, தலையணை மந்திரோபதேசம் போன்ற நாவல்களைப் படைத்துள்ளார். இவரை மர்ம நாவலின் முன்னோடி எனலாம்.
பி.ஆர். இராஜம் ஐயர்
                       1896-ஆம் ஆண்டு இராஜம் ஐயர் கமலாம்பாள் சரித்திரத்தை வெளியிட்டார். இதுவே தமிழில் தோன்றிய முதல் தொடர் கதை. மதுரை மாவட்டம் சிறுகுளத்தில் வாழ்ந்த முத்துசாமி ஐயர் - கமலாம்பாள் தம்பதிகளின் வாழ்வை இது சித்திரிக்கிறது. நகர நாகரிகம் கிராம வாழ்க்கையைப் பாதிக்கும் முறை, கூட்டுக் குடும்பச் சிதைவு, பெண்ணுரிமை முதலிய செய்திகளை இந்த நாவல் உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது.
அ. மாதவையா
                        இவர் பஞ்சாமிர்தம் என்ற மாத இதழ் நடத்தி வந்தார். கோணக் கோபாலன் என்ற புனை பெயரில் கவிதை, கதை, கட்டுரை முதலியன எழுதியுள்ளார். இவரது பத்மாவதி சரித்திரத்தில் பல நிகழ்ச்சிகள் ஒன்றோடு ஒன்று பின்னிக் கிடக்கின்றன. பத்மாவதியின் மேல் அவளுடைய கணவனுக்கு ஏற்படும் ஐயமே நீண்ட சிக்கலாய் வளர்ந்து முடிகிறது. விஜயமார்த்தாண்டம் என்னும் கதையில் நாட்டுக் கோட்டைச் செட்டியார்களும், வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் பல கோணங்களில் காட்டப்படுகிறார்கள். முத்து மீனாட்சி என்னும் நாவல் அவற்றைவிடப் புதுமை மிகுந்தது; புரட்சியானது. இளம் விதவை ஒருத்தி படும் துன்பங்களை அவளே எடுத்துரைக்கும் முறையில் இந்த நாவல் அமைந்துள்ளது.
                                இவர் கதைக் கருவிலும், கட்டமைப்பிலும் புரட்சி செய்தவர். இவரைக் கைலாசபதி தமிழ்நாட்டின் தாக்கரே எனப் பாராட்டுவார். (தாக்கரே - என்பவர் ஆங்கில நாவல் படைப்பாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்.)
மேலை இலக்கியத் தாக்கம்
                                மேலை நாடுகளில் துப்பறியும் புதினங்கள் மிகுந்த செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தன. அதைப் பின்பற்றித் தமிழிலும் 1910 முதல் 1940 வரையிலான காலக்கட்டத்தில் துப்பறியும் புதினங்கள் மிகுதியாகத் தோன்றின. இக்காலகட்ட நாவல்களைப் பொழுதுபோக்கு நாவல்கள் எனச் சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் பொழுது போக்கிற்காகவும் புதினங்கள் எழுதப்பட்டன. இக்காலக்கட்ட நாவல்கள் வாசகரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரணி குப்புசாமி முதலியார்
                              இவர், 1935 வரையில் 43 நாவல்கள் எழுதியுள்ளார். மேல்நாட்டுப் பொழுதுபோக்கு நாவலாசிரியர்களான ரெயினால்ட்ஸ், கானன்டாயில், லின்ச் போன்றோரின் நாவல்களைத் தழுவித் தமிழில் துப்பறியும் நாவல்கள் பலவற்றை எழுதிய பெருமை இவருக்குண்டு.இரத்தினபுரி இரகசியம் நாவலின் இறுதி வரையிலும், வியப்பும் திகைப்பும் நிறைந்த மர்மங்களும், சிக்கல்களும், எதிர்பாராத திருப்பங்களும் பொழுதுபோக்கு அம்சங்களாக நிறைந்துள்ளன. இந்நாவலில் கிருஷ்ணாசிங் துப்பறியும் பாத்திரமாகப் படைக்கப்பட்டுள்ளான்.கடற் கொள்ளைக்காரன், கற்பகச் சோலையில் அற்புதக் கொலை, மஞ்சளறையின் மர்மம் போன்றவை இவர் எழுதிய புதினங்கள்.
விடுதலைக்குப் பின்னர் நாவல்கள்
விடுதலைக்குப் பிந்தைய காலக் கட்டத்தில் தோன்றிய நாவலாசிரியர்கள் பலர்
(1) வரலாற்று நாவலாசிரியர்கள்
(2) விடுதலைப் போராட்டத்தைச் சித்திரிக்கும் நாவலாசிரியர்கள்
(3) சமுதாயச் சீர்த்திருத்த நாவலாசிரியர்கள்
(4) குடும்பச் சிக்கல்களைச் சித்திரிக்கும் நாவலாசிரியர்கள்
(5) வட்டார நாவலாசிரியர்கள்
என அவர்களை வகைப்படுத்தலாம்.
வரலாற்று நாவலாசிரியர்கள்
                     தமிழ் நாவல் வரலாற்றில் கல்கி ரா. கிருஷ்ண மூர்த்தியின் வருகை இளஞாயிற்றின் உதயம் போன்றது. நாவலைப் பொதுமக்கள் இலக்கியமாக, எல்லார்க்கும் உரியதாக ஆக்கிய பெருமை இவருக்கு உண்டு. கல்கி தாம் ஆசிரியராகப் பணியாற்றிய ஆனந்த விகடன், கல்கி வார ஏடுகளின் மூலம் தொடர்கதைகள் பல எழுதிப் புதினத்தின் வாசகர் வட்டத்தை விரிவு படுத்தினார்.மகேந்திர பல்லவன் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது பார்த்திபன் கனவு. அடுத்த வரலாற்று நாவல் சிவகாமியின் சபதம். மாமல்லபுரம் செல்கிறவர்கள் சிவகாமியின் சபதம் படித்தவர்களாக இருந்தால் தவறாமல் ஆயனச் சிற்பியையும், அவன் மகள் சிவகாமியையும் நினைப்பார்கள். சிவகாமியின் சபதத்தில் அவ்வளவு சிக்கல்கள் இல்லை. ஆயினும் சிற்பியின் மகளான சிவகாமி என்ற ஆடற் கலையரசியின் - வளர்ச்சியும், வாழ்வுப் போராட்டமும்; இன்னலும், குறிக்கோளும் நாவலின் தரத்தை உயர்த்துவனவாக உள்ளன. நாட்டியக் கலையில் நிகரற்று விளங்கிய அவளுடைய கலைத்திறமை, அரசியல் போராட்டங்களில் சிக்கி அல்லல்படும்போது கதையைப் படிப்பவர்களின் நெஞ்சம் துன்புற்றுத் துடிக்கிறது.இராசராச சோழனின் வரலாற்றைக் கொண்டு அமைந்த இவரின் பொன்னியின் செல்வன் கதையோட்டம் விறுவிறுப்பானது. கற்பனைச் சுவையிலும் இது இணையற்றதாக உள்ளது; பக்க அளவிலும் மிகப்பெரியது.அகிலனின் சோழர் காலச் சூழ்நிலையை விளக்கும் வேங்கையின் மைந்தன்-சாகித்திய அகாதமியின் பரிசு பெற்ற நாவலாகும். கயல்விழி, பாண்டியரின் ஆட்சியை விளக்குவது. வெற்றித் திருநகர் விஜயநகர ஆட்சியைப் பின்னணியாகக் கொண்ட வரலாற்று நாவல்.
ஜெகசிற்பியன் - இவர் படிக்கப் படிக்கச் சுவையும், திடீர்த் திருப்பமும் கொண்ட திருச்சிற்றம்பலம் என்னும் நாவலைப் படைத்துள்ளார். இவர் நாயகி நற்சோனை, ஆலவாய் அழகன், மகரயாழ் மங்கை, பத்தினிக் கோட்டம் முதலிய நாவல்களையும் படைத்துள்ளார்.
சாண்டில்யனின் மலைவாசல் ராஜமுத்திரை, யவனராணி, கடல்புறா ஆகிய புதினங்கள் குறிப்பிடத்தக்கவை. ராபர்ட் கிளைவ் பற்றிக் கூறும் வரலாற்று நாவலான ராஜபேரிகை வங்க மாநிலத்தின் பரிசை வென்ற பெருமைக்குரியது.
                      அரு. இராமநாதனின் - வீரபாண்டியன் மனைவி, அசோகன்காதலி; நா.பார்த்தசாரதியின் - பாண்டிமா தேவி, மணிபல்லவம்; விக்கிரமனின் - நந்திபுரத்து நாயகி, காஞ்சி சுந்தரி; பூவண்ணனின் - கொல்லிமலைச் செல்வி; கலைஞர் கருணாநிதியின் - ரோமாபுரிப் பாண்டியன், தென்பாண்டிச் சிங்கம்; மு. மேத்தாவின் - சோழநிலா; கி. ராஜேந்திரனின் - ரவி குலதிலகன்; ஸ்ரீ வேணுகோபாலனின் - சுவர்ணமுகி ஆகியவை சில சிறப்பு வாய்ந்த வரலாற்று நாவல்களாகும்.
விடுதலை இயக்க நாவலாசிரியர்கள்
                                       இந்திய மக்களின் தேசிய உணர்வும், அதன் விளைவாக எழுந்த விடுதலைப் போராட்டமும் இந்திய மொழிகளில் பல நல்ல நாவல்கள் பிறக்கக் காரணமாய் அமைந்தன. அவ்வழியில் தமிழிலும் தேசிய வீறு கமழும் நாவல்கள் பிறந்தன. இவ்வகை நாவல்களுக்கு உதாரணமாக கே.எஸ். வேங்கட ரமணியின் தேசபக்தன் கந்தன், அகிலனின் பெண், கல்கியின் தியாகபூமி, அலைஓசை, ர.சு. நல்ல பெருமாளின் கல்லுக்குள் ஈரம், ராஜம் கிருஷ்ணனின் வளைக்கரம், ந.பார்த்தசாரதியின் ஆத்மாவின் ராகங்கள் முதலியவற்றைக் குறிப்பிடலாம்.வேங்கடரமணி என்பவர் தென்னாட்டுத் தாகூர் என்று போற்றப்பட்டவர். இவரது தேசபக்தன் கந்தன் என்ற நாவல் இந்தியாவின் விடுதலை, கிராமங்களின் மறுமலர்ச்சி, தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு ஆகியவற்றை வலியுறுத்துவதால் இதனை முதல் காந்திய நாவல் என்றும் கூறுவர். நாட்டின் விடுதலைக்குப் போராடி மடியும் கந்தனின் வீரச்செயல் இந்நாவலைப் படிப்போரை நெகிழச் செய்கிறது.
                      அகிலனின் பெண் என்ற நாவலும் தேசிய வீறு கமழும் நல்ல நாவலாகும். இக்கதையில் வரும் சந்தானம் தேசிய வீரனாக மாறி, நாட்டு விடுதலைக்காக உழைக்கிறான். கிராமத்திற்குச் சென்று, அங்குள்ள மக்களைத் தட்டியெழுப்பியதால் சிறைத் தண்டனை அடைகிறான். சந்தானத்தின் மனைவி வத்சலா மனத்திலும் சிந்தனைப் புரட்சி உண்டாகிறது. கிராம மக்களது இரங்கத்தக்க நிலை, அவளது மூடிக்கிடந்த விழிகளைத் திறந்து விடுகிறது.
கல்கியின் அலை ஓசையில் இந்திய விடுதலைப் போராட்டத்தின் பெரும்பாலான நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. 1930-க்கும் 1947-க்கும் இடைப்பட்ட அரசியல் நிகழ்ச்சிகளை இந்நாவலில் ஆசிரியர் சுவை குறையாமல் விளக்கிக் காட்டியுள்ளார்.
கல்லுக்குள் ஈரத்தில் திரிவேணி, தீக்ஷிதர் முதலிய கதைமாந்தர்களை வரலாற்றுத் தலைவர்களுடன் இணைத்துக் கதை நிகழ்ச்சிகளில் மெய்ம்மைத் தன்மையை நல்ல பெருமாள் திறம்பட உருவாக்கியுள்ளார்.
கோவாவின் விடுதலைப் போராட்டத்தைச் சித்திரிக்கும் ராஜம் கிருஷ்ணனின் வளைக்கரம் சிறப்பானது. கோவா மக்களின் உள்ளத்தில் ஊற்றெனச் சுரந்து, பீறிட்டுப் பொங்கிய விடுதலை உணர்ச்சியையும், அதற்காக அவர்கள் செய்ய நேர்ந்த மகத்தான தியாகங்களையும் இந்நாவலில் அழகுற அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலே குறிப்பிட்டவை தவிர, வேறு பல நாவல்களிலும் விடுதலைப் போராட்டச் சாயல் படிந்திருப்பதைப் படிப்போர் உணரலாம்.
சமுதாயச் சீர்த்திருத்த நாவலாசிரியர்கள்
                                    தமிழ் நாவலாசிரியர்கள் சமுதாய விடுதலையை மனத்தில் கொண்டு பல கலைப்படைப்புகளை உருவாக்கத் தொடங்கினர். தமிழ் நாவல்களில் சமுதாயச் சீர்த்திருத்த நோக்கு தொடக்கக் காலத்திலேயே அரும்பிவிட்டது. சமுதாயச் சீர்த்திருத்தத்திற்கு முதலிடம் கொடுத்தவர் மாதவையா. இத்தகைய நாவல்களில் பெண்ணுரிமை, சாதிபேத மற்ற சமுதாயம், பழமையிலிருந்து விடுபட்ட பகுத்தறிவுச் சிந்தனை முதலியன மிகவும் வற்புறுத்தப்படுகின்றன.
பெண்ணுரிமைக்காக வாதாடிப் போராடியவர் வ.ரா.(வ.ராமசாமி) இந்நோக்கத்திற்காக எழுதப்பெற்ற புதினங்கள் சுந்தரி, கோதைத்தீவு போன்றவை.
பி.எஸ். ராமையாவின் பிரேமஹாரம் நாவலில் கல்யாணி வரதட்சணைச் சிக்கலால் புகுந்த வீட்டாரால் நிராகரிக்கப்படுகிறாள். அவள் தங்கச் சங்கிலிக்காகத் தன்னை நிராகரித்த கணவனுடன் போக மறுத்துவிடுகிறாள். கல்யாணியின் தந்தை தன் மகளின் வாழ்வு மலர வேண்டுமே என்பதற்காக எவ்வளவு சிரமப்படுகிறார் என்பதையும் இவர் இந்நாவலில் சித்திரித்துள்ளார்
கலப்பு மணம்
                      இன்றைய சமுதாயத்தில் கலப்பு மணம் செய்து கொள்வோருக்கு எத்தனையோ சிக்கல்கள் ஏற்படுகின்றன. அவற்றில் சிலவற்றைக் கொண்டு இக்காலக்கட்டத்தில் சில நாவல்கள் எழுதப் பெற்றன. ஆர். வி. யின் அணையாவிளக்கு கலப்பு மணச் சிக்கலை எடுத்துப் பேசுகிறது. இலட்சியமும் நடைமுறை வாழ்க்கையும் முரண்பட்டு மோதிக் கொள்ளும் காட்சியைத் தஞ்சை மாவட்டப் பின்னணியில், கிராம வாழ்வின் உயிர்களை ததும்ப இந்நாவலில் எழுதிச் செல்கிறார் ஆர். வி.
திசை மாறிய பெண்கள்
                              வாழ்க்கையில் சந்தர்ப்பச் சூழ்நிலையால் தவறிப் போய்விட்ட பெண்களின் வாழ்க்கை பல நாவல்களில் காட்டப்படுகின்றது. மு.வ. நாவல்களில் இவ்வாறு வழுக்கி விழுந்த பெண்கள் பலர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் தவறு செய்வதற்கான பல்வேறு காரணங்களையும் மு.வ. வெளிப்படுத்தியுள்ளார்.
விந்தனின் பாலும் பாவையும், டி.கே. சீனிவாசனின் ஆடும் மாடும் ஆகிய இரு நாவல்களும் இதே சிக்கலைத் தான் ஆராய்கின்றன.
ஏழைகள், தொழிலாளர்கள், உழைப்பாளிகளின் சிக்கல்கள்
                           நாடு விடுதலை பெற்ற பின் உழைக்காமலேயே சுகபோகங்களை அனுபவித்து விட வேண்டும் என்ற ஆசையும், மற்றவர்களை ஏமாற்றி வாழும் போக்கும் மக்களிடையே உருவாகி விட்டது. டாக்டர். மு.வ.வின் கயமையில் கயவர்களின் செல்வாக்கும், போலி அரசியல் வாதிகளின் முன்னேற்றமும் விளக்கப்படுகின்றன.
பேராசையும், வாய்ப்பும் கொண்டவர்கள் சமுதாயத்தில் பெரும்பாலான மக்களின் வாழ்க்கை வசதிகளையும், உரிமைகளையும் பறித்துக் கொள்ளும் கொடுமையைப் பொன்மலரில் அகிலன் சித்திரிக்கிறார். அரசாங்கத்தின் ஜவுளிக் கொள்கையால் பாதிக்கப்பட்ட நெசவாளர்கள், அல்லலுக்கு ஆளாகி, அழுது மடிந்ததைப் பஞ்சும் பசியும் நாவல் காட்டுகிறது. தறித் தொழிலாளர்களின் வாழ்க்கைப் பிரச்சனையை அதன் அடி ஆழம் வரை சென்று, கண்டுணர்ந்து இந்நாவலில் வெளிப்படுத்துகிறார் ரகுநாதன்.
செல்வராஜ் எழுதிய மலரும் சருகும் விவசாயிகளின் போராட்டத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது. ஐந்தாண்டுத் திட்டத்தின் வளர்ச்சிப் படிகளைச் சித்திரிக்கும் நோக்கில் எழுதப்பட்ட நாவல் ராஜம் கிருஷ்ணனின் அமுதமாகி வருக நாவல் ஆகும்.
சங்கரராமின் மண்ணாசை, லா.ச.ரா.வின் அபிதா, கி.ராஜநாராயணனின் கோபல்லபுரம், சுந்தரராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை, மணியனின் ஆசை வெட்க மறியும், இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல், சூரியகாந்தனின் மானாவாரி மனிதர்கள் முதலியன சிறந்த சமுதாயப் புதினங்கள்.
ஆண்-பெண் உறவு
                         ஆண் - பெண் உறவை, அதன் சிக்கலைக் கலைநோக்கோடு விமர்சிக்கும் தரமான நாவல்கள் பல தோன்றியுள்ளன. டாக்டர். மு.வ. வின் அல்லி, கரித்துண்டு, தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள், மோகமுள், அகிலனின் சித்திரப்பாவை முதலியவற்றை இவ்வகையில் குறிப்பிடலாம்.மேலும், கிருத்திகாவின் புதிய கோணங்கி, ஜெயகாந்தனின் ரிஷிமூலம், சிலநேரங்களில் சில மனிதர்கள், இந்திரா பார்த்தசாரதியின் மனக்குகை, வேஷங்கள், திரைக்கு அப்பால் ஆகிய நாவல்களில் இழையோடும் பிரச்சினை ஆண் பெண் உறவுகள் பற்றியதாகும்.
காதல் பற்றிப் பேசுவன
                       காதல், தாய்மை என்னும் இரு உணர்வுகளும் உலகிலேயே மிக உயர்ந்த உணர்வுகளாகப் போற்றப்படுகின்றன. பல நாவல்கள் காதலைப் பற்றியே பேசுகின்றன. அகிலன், நா. பார்த்தசாரதி, மு.வ., சு.சமுத்திரம், லக்ஷ்மி, சிவசங்கரி, இந்துமதி ஆகியோர் காதலின் மாண்பினை நயம்பட எழுதிக் காட்டியுள்ளனர்.நா. பார்த்தசாரதியின் பொன்விலங்கு என்ற நாவலும் நிறைவேறாத காதலைச் சித்திரிப்பதே. நா.பா.வின் பெரும்பாலான நாவல்களில் நிறைவேறாக் காதல் சித்திரிக்கப் படுகின்றது.சு. சமுத்திரத்தின் ஊருக்குள் ஒரு புரட்சி, வேரில் பழுத்த பலா போன்றவை நல்ல நடையும் புரட்சி நோக்கமும் உடையவை. வாசவனின் வாழ்வின் ராகங்கள், அந்திநேரத்து விடியல்கள் போன்ற நாவல்களும் காதலைச் சித்திரிக்கின்றன.
                        காதல் உணர்வு என்பது ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது என்பதையும், காதலுக்காக ஒருவர், மற்றவர்களுக்கு விட்டுக் கொடுப்பதையும், காதலில் ஆண் - பெண் இருபாலருள் ஒருவர் தோல்வி அடைந்தவர்களாகக் காட்டுவதையும் கருப்பொருள்களாகக் கொண்ட நாவல்கள் பல தமிழில் உள்ளன. அவை விரித்தால் பெருகும் இயல்பின.
பெண் எழுத்தாளர்கள்
                             குடும்ப நாவல்களைப் படைப்பதில் முன்னிற்பவர்கள் பெண் நாவலாசிரியர்களே. சமுதாய நலனுக்கும், குடும்ப வாழ்க்கைக்கும் உரம் ஊட்டக் கூடிய கருத்துகளையே இவர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.
லட்சுமி என்ற திரிபுரசுந்தரி - காஞ்சனையின் கனவு, மிதிலாவிலாஸ், அடுத்தவீடு போன்ற புதினங்களை எழுதியுள்ளார். அநுத்தமா குடும்பப்பிரச்சனையை ஒட்டி, கேட்டவரம், தவம், மணல்வீடு போன்ற நாவல்களை எழுதியுள்ளார். ஆர். சூடாமணி மனோதத்துவக் கதைகளை உருவாக்குவதில் வல்லவர். இவருடைய மனதுக்கு இனியவள், சோதனையின் முடிவு போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்துமதியின் அலைகள், நிழல்கள் சுடுவதில்லை போன்றவை எண்ணத் தகுந்தவை. கிருத்திகா, ஹெப்சிபா ஜேசுதாசன், ஜோதிர்லதா கிரிஜா, வாஸந்தி, குயிலி ராஜேஸ்வரி, குமுதினி, கோமகள், அனுராதா ரமணன் போன்ற நாவல் ஆசிரியர்களும் குறிப்பிடத்தக்கோர் ஆவர்.
வட்டார நாவலாசிரியர்கள்
                                       வட்டாரம் என்ற சொல் நிலவியலோடு தொடர்பு உடையது. ஒரு குறிப்பிட்ட பகுதியை நிலைக்களமாகக் கொண்டு, அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கையை எடுத்துக் காட்டும் நோக்குடன் எழுதப்படும் நாவல்களையே வட்டார நாவல்கள் எனப்படுகின்றன. இவ்வகை நாவல்களில் கதை ஒரு சிற்றூரிலோ, அல்லது சிறிய நகரத்திலோ நடப்பதாகக் காட்டப்படும், வருணனைக் கூறு நிறைய இடம்பெறும்.
                                      தமிழில் இப்போக்கைத்தோற்றுவித்த முன்னோடிகளாக கே.எஸ்.வேங்கடரமணி, ஆர்.சண்முகசுந்தரம், சங்கரராம் முதலியோரைக் குறிப்பிடலாம்.மண்ணாசை (சங்கரராம்) திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வீரமங்கலம் என்ற ஊரையும், நாகம்மாள் (சண்முகசுந்தரம்) கொங்கு நாட்டையும் பின்புலமாகக் கொண்டவை.
                      பின்வரும் நாவல்கள் வட்டார நாவல்களில் குறிப்பிடத்தக்கன. ஆர்.சண்முகசுந்தரத்தின் அறுவடை, சட்டிசுட்டது, சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல், ராஜம் கிருஷ்ணனின் குறிஞ்சித்தேன், ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு, சுந்தரராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை, நீல. பத்மநாபனின் தலைமுறைகள், பொன்னீலனின் கரிசல், கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம், தோப்பில் முகம்மது மீரானின் ஒரு கடலோரக் கிராமத்தின் கதை.
                             வாடிவாசல்-மதுரை மாவட்டத்து மறவர்கள் வாழ்வின் சிறுபகுதியையும், குறிஞ்சித்தேன்- நீலகிரி படகர்களின் முழு வாழ்வையும், தலைமுறைகள் நாஞ்சில் நாட்டு இரணியல் செட்டிமார்களின் வாழ்வையும் காட்டுகின்றன. புத்தம் வீடு - ஒரு கிறித்துவக் குடும்பத்தின் வாழ்வை, பனையேறிகளின் வாழ்வை எடுத்துக் காட்டுகிறது.
கோபல்ல கிராமம் - கோவில்பட்டி கரிசல் பகுதியைச் சார்ந்த கம்மவார் நாயக்கர்களின் வாழ்வை எடுத்துக் காட்டுகிறது. தி.ஜானகிராமனின் நாவல்களில் தஞ்சை மாவட்டத்து மண்ணின் மணமும், பேச்சு வழக்குகளும் இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.
                                     வட்டார நாவல்களில் மண்ணின் மணம் வீச வேண்டும் என்பர். தமிழில் இப்போக்கைத் தோற்றுவித்த முன்னோடிகளாக கே.எஸ்.வேங்கடரமணி, ஆர்.சண்முக சுந்தரம், சங்கரராம் முதலியோரைக் குறிப்பிடலாம்.வேங்கடரமணி, தேசபக்தன் கந்தனை எழுதினார். சிற்றூர்கள் சீர்திருத்தப்பட வேண்டிய அவசியத்தை அதில் விளக்கியுள்ளார். சங்கரராம் எழுதியுள்ள மண்ணாசை திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வீரமங்கலம் என்ற ஊரைப் பின்னணியாகக் கொண்டது. ஆர்.சண்முக சுந்தரம் எழுதிய நாகம்மாள் தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய பாதையை வகுத்தது. இயல்பான ஒரு கோவை மாவட்டக் கிராமத்துப்பின்னணியில், குறுகிய இடத்துக்குள் நிகழும் புகைச்சல்கள், ஆசைகள், வஞ்சகங்கள் எனப் பல்வேறு உணர்வுகளால் பின்னி அமைக்கப்பட்ட கதை நாகம்மாள் என்ற விதவையின் வாழ்வு பற்றியது.
                              சட்டி சுட்டது என்ற நாவல் எந்திர நாகரிகம் மிக உயர்ந்த நிலையில் வளர்ச்சி பெற்ற கோவை மாவட்டத்தில், கட்டை வண்டி கூட மிக எளிதில் செல்ல முடியாத ஒதுக்குப் புறத்தில் பழமைக் கூறுகளையெல்லாம் கட்டுக் குலையாமல் பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் செயல்பட்டு வந்த ஒரு வாழ்வோவியத்தைத் தீட்டிக் காட்டியது.சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் மதுரை மாவட்டத்து மறவர்கள்வாழ்வின் சிறுபகுதியையும், ராஜம் கிருஷ்ணனின் குறிஞ்சித் தேன் நீலகிரி படகர்களின் முழு வாழ்வையும், ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு ஒரு குமரி மாவட்டக் கிறித்துவக் குடும்பத்தின் வாழ்வையும் எடுத்துக் காட்டுகின்றன.
தற்கால வட்டாரப் புதினங்கள்
திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டயபுரம், கோவில்பட்டி இவற்றைச் சுற்றி உள்ள நிலப்பகுதி கரிசல் காடு எனப்படுகிறது. இந்தப் பகுதி பாரதியார் போன்ற பல இலக்கிய மேதைகளைத் தந்தது. கி.ராஜநாராயணன் எழுதிய கிடை என்ற சிறுபுதினம் (குறுநாவல்) வட்டார நாவல்களில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. அந்தக் கரிசல் காட்டுப் பகுதிகளில் குடியேறிப் பல தலைமுறைக் காலமாக வாழ்ந்து வரும் கம்மவார் நாயக்கர்களின் வரலாற்றை இரு நாவல்களாக இவர் படைத்துள்ளார். கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள் என்னும் இவை மிகச் சிறந்த படைப்புகளாகும். இவர் கரிசல் இலக்கியத் தந்தை என்று போற்றப்படுகிறார். பூமணியின் - பிறகு, வயிறுகள் சிறந்த கரிசல் வட்டாரப் படைப்புகள் ஆகும்.
தோப்பில் முகமது மீரான்
தோப்பில் முகமது மீரானின் முதல் புதினமான ஒரு கடலோரக் கிராமத்தின் கதை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பரிசு பெற்றது. தமிழ்நாட்டின் தென் கோடியில் அரபிக் கடல் கரையில் உள்ள ஒரு கிராமத்தில் பெரும்பான்மையாக உள்ள இஸ்லாமியச் சமூகத்தினரின் வாழ்வு, அவர்களது மொழியில் அற்புதமான நாவலாக உருவாகியிருப்பதைக் காணலாம். இவரது சாய்வு நாற்காலி என்னும் புதினம் சாகித்திய அகாதமி விருது பெற்றது. இவர் வட்டாரத் தமிழோடு, மலையாள மொழியையும் பெருமளவு கலந்து எழுதியுள்ளார். நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள், சதுரங்கக் குதிரை ஆகிய புதினங்கள் குறிப்பிடத்தக்கவை.
முன்னோடிகளும் பிறரும்
வரலாற்று நாவல்களில் மக்களுக்கு ஒரு பற்றை ஏற்படுத்தியவர் கல்கி. வரலாற்று நாவல்களைச் சிறப்பாக எழுதிப் பிற்காலச் சந்ததியினருக்கு முன்னோடியாகத் திகழ்ந்த இவரை வரலாற்று நாவல் துறையின் தந்தை எனலாம். பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் என்பன இவரது படைப்புகள்.
சிவகாமியின் சபதம் பல்லவர் காலத்தின் பெருமையைப் பறை சாற்றும். இப்புதினத்தில் இடம் பெறும் சிவகாமி, வாசகர் நெஞ்சில் நிலையான இடத்தைப் பெற்றுவிட்ட கதாபாத்திரமாகும். இன்றும் மாமல்லபுரத்துச் சிற்பங்களைப் பார்க்கும் பொழுது ஆயனரும், அவர் மகள் சிவகாமியும் கண் முன் நடமாடி மகிழ்வூட்டக் காணலாம். அடுத்து இராசராச சோழனின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன் என்ற புதினத்தை உருவாக்கினார். இதில் வரும் நந்தினி பாத்திரம் தனிச் சிறப்பு வாய்ந்தது.
சாண்டில்யன் குமுதம் பத்திரிகை மூலம் பல புதினங்கள் எழுதி எண்ணற்ற வாசகர்களையும் பெற்றார். இவரது மலைவாசல், ராஜமுத்திரை, யவனராணி, கடல் புறா ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவரின் ராபர்ட்கிளைவ் பற்றிக் கூறும் ராஜபேரிகை என்ற புதினம் வங்க மாநிலப் பரிசு பெற்றது.
கலைஞர் மு.கருணாநிதியின் ரோமாபுரிப்பாண்டியன், தென்பாண்டிச் சிங்கம் இரண்டும் குறிப்பிடத்தக்கவை. தமிழகத்தின் தொடக்கக் கால வரலாற்றை ரோம் நாட்டு அகஸ்டஸ் கால வரலாற்றோடு இணைக்கும் முயற்சியில் இவர் ரோமாபுரிப் பாண்டியனைப் படைத்துள்ளார். வணிகத் தொடர்பால் இரு நாட்டின் உறவு பெருகியதைப் பல இலக்கியச்சான்றுகள் தங்க நாணயங்கள், புதைபொருள் சான்றுகள் உறுதி செய்கின்றன. கி.மு. 20ஆம் ஆண்டினைத் தொடக்கமாகக் கொண்டு கதை தொடங்குகிறது. மேத்தாவின் சோழநிலா, பூவண்ணனின் காந்தளூர்ச்சாலை, கொல்லிமலைச் செல்வி அரு.ராமநாதனின் வீரபாண்டியன் மனைவி, நா.பார்த்தசாரதியின் பாண்டிமாதேவி, மணி பல்லவம் ஆகியவை சிறப்பு வாய்ந்த புதினங்களாகும்.
மொழி பெயர்ப்பும் தழுவலும்
பிறமொழிப் புதினங்களை அப்படியே மொழிபெயர்ப்பு செய்வதை மொழி பெயர்ப்புப் புதினங்கள் என்று வழங்குவர். மொழிப் புதினங்களை உள்ளவாறே மொழி பெயர்ப்பதால் ஏற்படும் இடையூறுகளைத் தடுக்கவும், வாசகர்களுக்கு எளிமையும் இனிமையும் தரவும் பிறமொழிக் கதைகளுக்குத் தமிழ்நாட்டுச் சூழலும், தமிழ்ப் பெயர்களும் தந்து எழுதப்படும் புதினங்களைத் தழுவல் புதினங்கள் என்பர்.
மொழி பெயர்ப்புப் புதினங்கள்
காண்டேகரின் மராத்தி நாவல்களை கா.ஸ்ரீ.ஸ்ரீ. சிறப்புற மொழி பெயர்த்து அளித்துள்ளார். எரி நட்சத்திரம், கிரௌஞ்ச வதம், சுகம் எங்கே? முதலியன இவரது சிறந்த மொழி பெயர்ப்புகளாகும். த.நா.குமாரசாமியும், த.நா.சேனாதிபதியும் தாகூர் படைத்த வங்காள நாவல்களை மொழிபெயர்த்துள்ளனர். துளசி ஜெயராமன், சரசுவதி ராம்நாத் இருவரும் வங்காளம், இந்தி, குஜராத்திப் புதினங்களையும், வீழிநாதன் - இந்திப் புதினங்களையும் தமிழில் மொழி பெயர்த்துள்ளனர். ஒரியா மொழிக் கதையைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காகத் தமிழ்நாடன் சாகித்திய அக்காதமி விருது பெற்றுள்ளார். சரஸ்வதி ராம்நாத்தும் மொழி பெயர்ப்புக்காகச் சாகித்திய அக்காதமி விருது பெற்றவர். கன்னட மொழியில் புகழ்பெற்ற படைப்பாளியான சிவராம கரந்த் எழுதிய மண்ணும் மனிதரும், அழிந்த பிறகு, பாட்டியின் கனவுகள் ஆகிய நாவல்களை டி.பி.சித்தலிங்கய்யா மொழி பெயர்த்திருக்கிறார். பாட்டியின் கனவுகள் ஞானபீட விருது பெற்ற படைப்பாகும். கன்னட மொழியில் சாரா அபுபக்கர் எழுதிய சந்திரகிரி ஆற்றின் கரையில் என்ற புதினத்தைத் தமிழில் மொழி பெயர்த்ததற்காக சாகித்திய அக்காதமி விருதைத் தி.சு.சதாசிவம் பெற்றுள்ளார். இப்புதினம் தமிழில் திரைப்படமாகவும் வந்தது.

புகழ் பெற்ற மொழி பெயர்ப்புப் புதினங்கள்
                                            மாக்ஸிம் கார்க்கியின் தாய், டால்ஸ்டாயின் போரும் அமைதியும், ஹெமிங்வேயின் கடலும் கிழவனும், வால்டர் ஸ்காட்டின் ஐவன் ஹோ முதலியன சிறந்த மொழி பெயர்ப்புப் புதினங்களாகும். தாகூர், பங்கிம் சந்திரர், சரத்சந்திரர் ஆகியோரின் வங்க நாவல்களும், தகழி சிவசங்கர பிள்ளையின் செம்மீன் என்ற மலையாள நாவலும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
தழுவல் புதினங்கள்
                                     இவ்வகையில் முதன் முதலில் ஆரணி குப்புசாமி முதலியார் முயற்சியால் ரெயினால்ட்ஸ் (Reynolds) எழுதிய புதினங்கள் தமிழ் உருவம் கொண்டன. இவரைத் தொடர்ந்து வடுவூர் துரைசாமி ஐயங்காரும் மேனகா, திகம்பர சாமியார் அல்லது கும்பகோணம் வக்கீல் ஆகிய இரண்டு புதினங்களைப் படைத்தார். இவை பின்னர் திரைப்படங்கள் ஆக்கப்பட்டும் புகழ் பெற்றன.
                                    டால்ஸ்டாயின் அன்னாகரினீனாவைத் தழுவி, நாரண துரைக்கண்ணன் சீமாட்டி கார்த்தியாயினி என்ற நாவலை உருவாக்கினார். டிக்கன்ஸின் ஆலிவர் டுவிஸ்டைத் தழுவி எஸ். மாரிசாமி அனாதை ஆனந்தன் என்ற புதினத்தை உருவாக்கினார். ரெயினால்ட்ஸ் புதினத்தைத் தழுவி மறைமலை அடிகளார் குமுதவல்லி அல்லது நாகநாட்டரசி என்ற புதினத்தை எழுதினார்.

4 comments:

  1. பயனுள்ள தகவல்களின் தொகுப்பு. நன்றி

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல்கள்! நன்றி!

    ReplyDelete
  3. அருமையான தகவல்கள்

    ReplyDelete