Monday, 17 February 2014

நியாமாரே!!!!!!!!!!!!!!!!!


எந்த படத்தையும் முழுமையாக ஏற்கவும் நிராகரிக்கவும் முடியாது. இது ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை போல தோன்றும். ஆனால் இதே வாதாம் படு மோசமான மசாலாப்படங்களுக்கும் பொருந்தும். அவற்றில் கூட ஓரிரு ஏற்கத்தக்க அம்சங்கள் எப்போதும் இருக்கத்தான் செய்கின்றன. ஒரு படம் வெகுஜன பார்வையாளர்கள் முன்பு வைக்கப்படும்போது அவர்கள் அந்தப் படத்தை எப்படி புரிந்துகொள்ளும் வாய்ப்பை அந்தப் படம் தருகிறதா என்பதே பிரதானமானது சாதாரண பார்வையாள்ளருக்கும் படைப்பாளி தான் கூற வருவது இன்னது என்றுபுரியும் வகையில் தன் படைப்புகள் இருத்தல் வேண்டும்.         
                                            எரியும் பனிக்காடு என்ற நாவலையும் நாஞ்சில் நாடனின் இடலாக்குடி இராசா என்னும் சிறுகதையையும் இணைத்து திரைக்கதையாக உருவாக்கி பரதேசி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் பாலா. எரியும் பனிக்காடு என்னும் நாவலில் மலைக்காடுகளில் தேயிலை செடிகளுக்கு இடையில் தங்கள் வாழ்வினை இழந்த மக்களின் உருக்கமான வரலாறு எழுதப்பட்டுள்ளது. எரியும் பனிக்காடு என்ற நாவலை மட்டுமே படமாக்கினால் மூன்று மணி நேரம் படமாக எடுக்கும் அளவிற்கு சாத்தியங்கள் அதிகமுள்ள நாவல் . ஆனால் அதில் பாலா தன் படங்களில் வழக்கமாக வைத்திருக்கக்கூடிய பாத்திரம் எதுவும் இல்லை. பிதாமகன் விக்ரம், நான் கடவுள் ஆர்யா போலவோ ஒரு பாத்திரத்தை அமைப்பது பாலாவிற்கே உரிய தனிச்சிறப்பாகும். பாலாவின் திரைப்படங்களில் வரும்    கதாப்பாத்திரங்களை பார்க்கும் பொழுது டிஸ்கவரி தொலைக்காட்சியில் வரும் மானை சிங்கம் வேட்டையாடும் மிருகத்தனமே நினைவில் வருகிறது. குறிப்பாக பிதாமகன் படத்தில் வில்லனை நாயகன் கொல்லும் காட்சி. இவ்வாறு பாத்திரங்களில் தனிச்சிறப்பை மீண்டும் நிரூபிக்கவே இடலாக்குடி இராசா என்ற கதாப்பாத்திரத்தை தேர்ந்தெடுத்துள்ளார்.
                                           எரியும் பனிக்காடு நாவலை எழுதிய டாக்டர் டேனியல் ஒரு விஷயத்தை தெளிவாக முன்னுரையில் சொல்லியிருக்கிறார். அந்த கதை 1900களி தேயிலைத் தோட்டங்களில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி அப்போது அங்கே வேலை பார்த்தவர்கள் மற்றும் அவர் நேரடியாக பார்த்ததன் அடிப்படையில் எழுதுவதாகச் சொல்லியிருக்கிறார். தன் கதையின் ஆரம்பத்திலேயே கதை நடக்கும் வருடம் 1925 என்று சொல்கிறார். அந்தக் கிராமம் அரிஜனங்கள் வாழும் கிராமம் என்று எழுதுகிறார். பாலாவோ தன் படத்தில் கதை நடப்பது 1939-ல் என்கிறார். அது தலித்துகளின் கிராமம் என்பதற்கான குறிப்புகள் எதுவும் இல்லை. அந்த கிராமம் பொய்யானது.
டாக்டர் டேனியல் நாவலில் முழு கிராமமும் நடைபயணமாக புறப்பட்டு சொல்வதில்லை . ஒரு ஜோடி ஊரை விட்டு பழனிக்குப்போய் ரயிலில் கங்காணியால் அழைத்து செல்லப்பட்டு போகிறது. பாலா படத்தில் எல்லாரும் போகிறார்கள். ஏன் எல்லாரும் போகிறார்கள் . கடும் பஞ்சமா ? ஊரில் வேலை இல்லையா? அதெல்லாம் எதுவும் சொல்லப்படவில்லை. ஊரை பஞ்சக் கொடுமையில் சிக்கி தவிக்கும் ஊராகவும் காட்டப்படவில்லை. திருமணம் நடக்க விருந்து சாப்பிடும் சூழல்தான் காட்டப்படுகிறது. அதையடுத்து பெரும் பஞ்சம் என்ற குறிப்பு கூட கிடையாது.
இந்த புத்தகத்தில் மிகவும் வறட்சியாக, ஒரு வேளை சாப்பிடக்கூட வழி இல்லாத மக்களாகத் தான் துவக்கத்தில் வருவார்கள் . இதன் காரணமாகவே என்ன வேலை கிடைத்தாலும் சரி என்ற நிலையில் இருப்பார்கள். பரதேசியில் அப்படியா இருக்கிறது? நெல்லுச்சோறுக்காக எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்ற அளவிலும், கை குத்தல் அரிசி தான் அந்த காலத்தில் பயன் படுத்தியுள்ளனர் . அந்த அரிசி பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் தும்பைப்ன் பூ போன்ற வெண்மையான அரிசி பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த அளவிற்கு செழிப்பு காணப்படுகிறது படத்தில்.
                       நில உடமையாளர்களான நாயக்கர்களாலும் தேவர்களாலும் ஒடுக்கப்படும் தலித்கள்தான் நாவலின் பிரதான கதாபாத்திரங்கள். ஹோட்டல்களின் முன்னால் இருக்கும் இருக்கையில் தலித்களுக்கு உட்கார அனுமதி கிடையாது என்பதில் ஆரம்பித்து அன்றைய காலகட்டத்தில் இருந்த அனைத்து யதார்த்த அம்சங்களும் நாவலில் இடம்பெற்றிருக்கிறது. பாலா தேவர் என்பதால், தேவர்கள் மீதான விமர்சனத்தை முன்வைக்க அவருடைய சாதிப்பாசம் தடுத்துவிடுகிறது. மேலும் நாவலில் தலித்களைக் கொடுமைப்படுத்தும் கங்காணியாக வருவது ஒரு தலித். அதையும் தெளிவாகச் சித்திரிக்காமல் விட்டுவிடுகிறார். அப்படியாக, இது யதார்த்தப் படம்தான். ஆனால், யதார்த்தம் இருக்காது. இது ஒரு மனிதனை உடம்பில்லாமல் சித்திரிப்பதைப் போன்றது.
                         நாவலில் கங்காணி ஒவ்வொரு ஊரிலும் ஆள் பிடிக்கும் முறை மிகவும் அழகாக விவரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு கிராமத்தில்  இருந்தும் ஓரிரு குடும்பத்தினரை மட்டும்தான் அவன் அழைத்துச் செல்வான். அதுதான் சாத்தியம். ஏனென்றால், அப்போதுதான் அடுத்த தடவை அந்த ஊரில் வந்து வேறு யாராவது இரண்டு அப்பாவிக் குடும்பத்தை அழைத்துச் செல்லமுடியும். ஒரே கிராமத்தில் இருந்தே ஐம்பது அறுபது பேரை அழைத்துச் சென்று கொடுமைப்படுத்தினால், அடுத்தமுறை அந்த ஊர் பக்கமே தலைவைத்துப் படுக்க முடியாமல் போய்விடும்.
                        ஒவ்வொருகிராமத்தில் இருந்தும் ஓரிரு குடும்பத்தினரை மட்டும் தனிமைப்படுத்தி அழைத்துச் செல்வதில் இன்னொரு தந்திரமும் அடங்கியிருக்கிறது. அப்படி தனியாக இருப்பவர்கள்தான் அடக்குமுறையை எதிர்த்துப் போராடப் பயப்படுவார்கள். ஒரு ஊரில் இருக்கும் அனைவரையும் அழைத்துச் சென்றால் அவர்களிடையே வலுவான ஒற்றுமை இருக்கும். எந்தவொரு அடக்குமுறையையும் அவர்கள் எளிதில் எதிர்த்துவிடுவார்கள். எனவே, கங்காணிகள் ஒவ்வொரு ஊரில் இருந்தும் ஓரிரு குடும்பங்களை மட்டுமே அழைத்துச் செல்வார்கள்.

                    பாலாவோ தன் படத்தில் ஒரே கிராமத்தில் இருந்து அனைவரையும் அழைத்துச் செல்வதாகக் காட்டியிருக்கிறார்.
                         நாவலில் நாயகனும் நாயகியும் தங்கள் சொந்த ஊரை விட்டுச் செல்வதற்கான காரணம் அருமையாக விவரிக்கப்பட்டிருக்கும். அந்த ஊரின் வறுமை வெகு நுட்பமாக, படு யதார்த்தமாக நாவலில் விவரிக்கப்பட்டிருக்கும். நாயகியின் கொலுசை அடகு வைத்து அதில் கிடைத்த பணத்தை வைத்து நாலைந்து நாட்கள் சாப்பிட்டிருப்பார்கள். அதுவும் கேப்பை மாவு கஞ்சியும் சுட்ட மிளகாய்களும்தான் உணவு. அதுகூடக் கிடைக்காமல் போகும் நிலை ஏற்படும். உள்ளூரில் வேலை எதுவும் இல்லாமல் போய்விட்டிருக்கவே, பக்கத்து டவுனுக்குப் போய் வேலை தேடுவான் நாயகன் கருப்பன். இன்னிக்கு வேலை இல்லை நாளைக்கு வா என்று ஒரு ஹோட்டலில் சொல்வார்கள். உங்க அடிமை சாமி… அடிமையோட பொஞ்சாதி, அம்மா யாருமே நேத்திலிருந்து எதுவுமே சாப்பிடலை. நாளைக்குச் செய்ய வேண்டிய வேலையை இன்னிக்கே செய்யறேன் என்று பிச்சை எடுக்காத குறையாக கெஞ்சுவார் நாயகன் (ஆங்கில மூலத்தில் அடிமை – ஸ்லேவ் என்ற நேரடியான வார்த்தையை டேனியல் எழுதியிருந்தாரா என்று தெரியவில்லை. முற்போக்கு மொழிபெயர்ப்பாளரின் கைவண்ணமாக இருக்கும் என்றே தோன்றுகிறது). இப்படியான நிலையில்தான் கங்காணியின் கழுகுப் பார்வையில் சிக்குவார். திரைப்படத்திலோ இது மேலோட்டமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது.
                                 வேறு ஊருக்குச் செல்லும் நாயகன் நேராக அங்கிருக்கும் ஒரு ஹோட்டலின் முன்னால் போட்டிருக்கும் பெஞ்சில் போய் ஏறி உட்கார்ந்துவிடுகிறார். உடனே அந்த ஹோட்டல்காரர் அவனைப் போட்டு அடி அடியென்று அடிக்கிறார். அதில் தலித்கள் உட்காரக்கூடாது என்பது நாயகனுக்குத் தெரியாதாம். அதாவது, அவருடைய ஊரில் அப்படியான எந்த வழக்கமும் கிடையாதாம்.அதன் பிறகும்கூட கங்காணி சொல்லும் வார்த்தைகளைக் கேட்டு அப்படியே புறப்பட்டுவிடமாட்டான் நாவலின் நாயகன். மனைவி, அம்மா, மாமனார் என அவனுடைய குடும்பத்தினர் ஒவ்வொருவராகக் கேட்பான். எல்லாருக்குமே பயமாகத்தான் இருக்கும். கடைசியில் ஒரு பல்லி கூரையில் இருந்து கத்தும். அதை நல்ல சகுனமாகக் கருதி புறப்பட ஆயத்தமாவார்கள். நாவலை முழுவதும் படித்து முடித்த பிறகு எங்கு பல்லி சத்தம் கேட்டாலும் நமக்கு ஒருமுறை தூக்கிவாரிப்போடும். அந்த அளவுக்கு அது எளிய மக்களின் அப்பாவித்தனத்தின் மீது வலி மிகுந்த இரக்கத்தை உருவாக்கும்.
                                    நாவலில் நாயகன் தன் அம்மாவை விட்டு விட்டுச் செல்லத் தீர்மானிப்பான். முப்பது நாற்பது வருடங்கள் கூடவே இருந்த தாயை விட்டுப் பிரியும் சோகம் ஒருபுறம்… சுற்றிச் சுற்றி வாட்டும் நிகழ்காலம் ஒரு புறம். நிச்சயமில்லாத எதிர்காலம் இன்னொருபுறம் என அவனுடைய வேதனையானது நாவலில் அணையில் சேகரமாகும் நீர்த்துளி போல் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடிக் கொண்டே வரும். இவற்றில் எதுவுமே படத்தில் இடம்பெறவில்லை.
                                   நாவலில் பூர்விக கிராமத்தில் இருந்து தேயிலைத் தோட்டத்துக்கு மக்கள் மேற்கொள்ளும் பயணம் மிக அற்புதமாக விவரிக்கப்பட்டிருக்கும். போகும் வழியில் ஒவ்வொரு ஊரில் தங்கிக் கொள்வது, உணவுக்கு செய்திருக்கும் ஏற்பாடுகள், வழியில் தென்படும் தெளிந்த நீரோடையில் குளிப்பது இவை எல்லாவற்றையும்விட ரயிலை முதல் முறையாகப் பார்க்கும் கிராமத்தினரின் அனுபவங்கள் நாவலில் அருமையாக விவரிக்கப்பட்டிருக்கும். பெரும் சத்தத்துடன் புகையைக் கக்கியபடி நுழையும் ரயிலைப் பார்த்து மிரண்டு அதில் ஏற பயப்படும் பெண்களில் ஆரம்பித்து ஆரம்பகட்ட உற்சாகம் வடிந்து ரயில் பெட்டியின் வெம்மை தகிக்க ஆரம்பிப்பதுவரை ஒவ்வொன்றையும் துல்லியமாக விவரித்திருப்பார் நாவலாசிரியர். பாலா அந்தப் பயணத்தை முற்றாக வெட்டி எறிந்துவிட்டிருக்கிறார்.
                              நாவலில் மூன்று நாட்கள் பஸ்ஸிலும் ரயிலிலும் பயணம் செய்து அடைந்த தேயிலை எஸ்டேட்டை திரைப்படத்தில் 48 நாட்கள் நடந்தே சென்றடைகிறார்கள். இந்தப் பயணத்தை ஆப்ரிக்காவில் இருந்து கறுப்பர்களை வெள்ளையர்கள் பிடித்து இழுத்துச் சென்றார்களே அதற்கு இணையான ஒன்றாகச் சித்திரிக்கிறார் இயக்குநர். போகும்வழியில் நூற்றுக்கணக்கில் இறந்தது, இறந்தவர்களைக் கடலிலும் காடுகளிலும் அப்படியே போட்டுவிட்டுப் போனது என உலகின் மிகப் பெரிய சோகத்தை சற்றே தொலைவில் உள்ள எஸ்டேட்டுக்குப் போகும் வழியில் நடப்பதாகக் காட்டுகிறார். அதிலும் ஒரே கிராமத்தில் இருந்து செல்பவர்கள், வழியில் தங்கள் கிராமத்து நபர் ஒருவர் உடல் தளர்ந்து விழுந்துவிடவே அப்படியே போட்டுவிட்டுப் போகிறார்கள். இத்தனைக்கும் தேயிலைத் தோட்டச் சிறைக்குள் அவர்கள் போய் மாட்டிக்கொள்ளவே இல்லை. இந்த நிமிடத்தில்கூட கங்காணியின் உண்மை சொரூபம் தெரிந்து பூர்விக கிராமத்துக்கே அவர்கள் திரும்பியிருக்க முடியும். நாவலில் தேயிலைத் தோட்டத்துக்குப் போய்ச் சேரும் வரை கங்காணியின் முழு கொடூர முகம் தெரியவராது.

                                 நாவலில் நாயகனுக்கும் நாயகிக்கும் ஊர் திரும்ப வாய்ப்பு கிடைக்கும். ஆனால், உடல் நலம் குன்றியதாலும் செட்டியாரால் கூடுதல் கடன் பொய்யாக எழுதப்பட்டதாலும் எதிர்பார்த்த பணம் கையில் சேர்ந்திருக்காது. எனவே, எஸ்டேட்டிலேயே மேலும் ஓரிரு வருடங்கள் தங்கி பணம் சம்பாதித்துக் கொண்டு ஊர் திரும்பலாம் என்று தீர்மானிப்பார்கள். அந்த அத்தியாயத்தைப் படிக்கும்போது, எப்படியாவது தப்பித்துப் போய்விடுங்கள்… இங்கே தங்காதீர்கள் என்று நம் மனது கிடந்து துடிக்கும். ஆனால், அவர்களோ கூண்டைத் திறந்துவிட்டாலும் வெளியில் வந்து சீட்டை எடுத்துக் கொடுத்துவிட்டு, அமைதியாகக் கூண்டுக்குள் மீண்டும் நுழைந்து கதவை மூடிக்கொள்ளும் அப்பாவிக் கிளிகளைப் போல் அங்கேயே தங்க முடிவெடுத்துவிடுவார்கள். படத்தில் அப்படியான காட்சி இடம்பெறவில்லை.
                            ஆங்கிலேய துரைகள் வெளிப்படையாக எல்லாரும் பார்க்கும்போதும் கூலிப் பெண்களிடம் லேசாக சில்மிஷம் செய்வது உண்டு என்றாலும் படுக்கைக்கு அழைப்பது என்பது மிகவும் நுட்பமாகவே செய்யப்படும். ஏற்கெனவே துரையின் வழிக்கு வந்திருக்கும் பெண் மூலம் புதிய பெண்ணுக்கு வலைவிரிக்கப்படும். துரையின் வீட்டைப் பெருக்கி சுத்த்ம் செய்துவிட்டு வந்துவிடுவோம் என்று புதியவளை அழைத்துச் செல்வாள். அங்கு போன பிறகு, இரவு உணவையும் சமைத்துவைத்துவிட்டு வா, நான் போகிறேன் என்று சொல்வாள். இன்னொரு ஆணுக்கு சமைத்துப் போடு என்ற ஒற்றை வாக்கியம் ஆழமான பொருள் பொதிந்தது. நுட்பமான வெளிப்பாடு, நாசூக்கு என்பதெல்லாம் எளிய மக்களுக்கு அந்நியமான ஒன்றல்ல. அவர்களுடைய வாழ்க்கையிலும் அது ஏராளம் உண்டு. இப்படியானவையெல்லாம் எளிய பார்வையாளருக்குப் புரியாது என்று சொல்லும் ஒரு படைப்பாளியின் ரசனை உணர்வைத்தான் நாம் இங்கு சந்தேகிக்க வேண்டும். இவை எல்லாம் நாவலில் அற்புதமாக இடம்பெற்றிருக்க படமோ தட்டையாகத் திரையில் விரிகிறது.
                                வெள்ளைக்கார துரைமார் கூலிப் பெண்களைப் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்திக் கொள்வதுபோலவே, துரையம்மாக்களும் வாட்ட சாட்டமான சிவந்த நிற கூலித் தொழிலாளர்களை தங்கள் இச்சைக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கணவன் உடல் நிலை மோசமாகி மருத்துவமனையில் இருக்கும்போது கணவனின் தம்பியை உடலுறவுக்கு அழைக்கிறாள் ஒருத்தி. தன் மனைவியை துரைக்கு விருந்தாக்கி சலுகைகளைப் பெற்றுக்கொள்ளும் இடைநிலைப் பணியாளர்கள் என வாழ்வின் பல்வேறு பக்கங்கள் நாவலில் போகிற போக்கில் விரிகின்றன.
                                    மழைக்காலத்தில் வெள்ளம் வருகிறது. ஆற்றுக்குக் கரையோரமாக இருக்கும் லைன் வீடுகளில் இருப்பவர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். தப்பித்தவர்கள் எல்லாம் கரையில் தவித்தபடி நின்றுகொண்டிருக்க ஒரு சிறுவனும் சிறுமியும் அடித்துச் செல்லப்படுவதும் அவருடைய அம்மா கதறி அழுவதும் மற்றவர் அவரைத் தடுத்துப் பிடிப்பதும் நாவலில் தத்ரூபமாக சித்திரிக்கப்பட்டிருக்கும். படத்தில் இவை எதுவுமே கிடையாது.

பி.எச்.டேனியல்
 நான் இந்த ஆய்வினை மேற்கொள்ள முக்கிய காரணம், தேயிலைத்தோட்டங்களில் இறந்த , வேதனையை அனுபவித்த , வெள்ளைக்காரர்களின் கொடுமையை அனுபவித்த அப்பாவி மக்களின் கஷ்டம் வெளியுலகிற்கு தெரியாமலே போய்விடக்கூடாது எனும் நல்ல எண்ணத்துடன் அவர்கள் அனுபவித்த கொடுமைகளை அங்கு பணிபுரிந்த மருத்துவர் பி.எச்.டேனியல் “ Red Tea “ என்ற நாவலாக எழுதியுள்ளார். இதனைத்தான் தமிழில் “எரியும் பனிக்காடு”  என்று முருகவேள் என்பவர் மொழிபெயர்த்துள்ளார். இப்படிப்பட்ட அவரது கதாப்பாத்திரத்தை கிருத்தவமத மற்றம் செய்பவராகக்காட்டி, அவரை கேலிக்கூத்தாடி போல் ஆடவிட்டு அனைவரின் நெஞ்சத்திலும் நெருப்பு அள்ளி கொட்டிவிட்டார் பாலா. இந்த மருத்துவர் இல்லை என்றால் இந்தப் “பரதேசி” படமே இல்லை. தேயிலைத்தோட்டத்து மக்களின் எந்த கஷ்டமும் இந்த படத்தில் வரவில்லை. அது போன்ற கஷ்டங்களை உணர்த்தும் காட்சிகள் சரியான முறையில் சித்தரிக்கப்படவில்லை. அப்படி இருக்கும் போது பி.எச்.டேனியலை உயர்த்தி கூறவில்லை என்றாலும் இப்படி கேவலப்படுத்தியிருக்க வேண்டாம். இந்த மருத்துவர் பற்றி குறிப்பிடாமலே இருந்திருந்தால் கூட சரி என்று விடலாம். பலரின் கஷ்டங்களை வெளி உலகிற்கு உணர்த்திய அவர்களுக்காக சங்கம் அமைத்து அவர்களின் துயர் நீங்க உதவிய ஒருவரை இப்படி கேவலப்படுத்தி காட்சிகள் அமைப்பது சங்கடத்திற்குரியது. எந்த ஒரு மதத்திற்கும் கிண்டலான குற்றச்சாட்டாக ஒரு பொது அடையாளம் உள்ளது போல் , கிருத்துவ மதத்திற்கு மத மாற்றம் அதிகம் செய்பவர்கள் என்ற பொதுப்படையான பேச்சு உள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது. இதைத்தான் பாலா எடுத்ததாக நினைக்கலாம் ஆனால் இதைக்கூற இந்தப்படம் இந்த கதாப்பாத்திரம் பொருத்தமானதல்ல. “நான் கடவுள்” படத்தில் ஒருவர் இந்துக்கடவுளை தகாத வார்த்தையால் திட்டுவார். உண்மையில் அது அந்த சூழ்நிலைக்கு பொருந்தி வந்தது சூழ்நிலையும் அப்படி.
அதுபோல ஒரு வசனம் இந்தப்படத்தில் வரவேண்டிய அவசியம் இல்லை . அப்படியே வரவேண்டி இருந்தாலும் அது இந்த மருத்துவர் கதாப்பாத்திரத்தை குறித்து வரவேண்டிய எந்த அவசியமும் இல்லை . வேறு ஏதாவது ஏற்கத்தக்க காரணங்கள் கூட இந்த இடத்தில் இல்லாமல் போனதும் உண்மை. இந்த படத்தில் பி.எச்.டேனியலின் கதாப்பாத்திரம் மிகவும் வருந்த தக்க முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த வித ஆராய்சிக்குறிப்புகளும் இல்லாமல் அவசியமே இல்லாமல் கீழ்த்தரமான ரசனைகளை உருவாக்க வேண்டிய இது போன்ற காட்சிகள் இங்கு இவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளன. பரிசுத்தமும் அவரது மனைவியும் ஆடிப்பாடும் காட்சி ரசனைக்குறைவான வகையில் படமாக்கப்பட்டுள்ளது. கொள்ளை நோயில் தன்சிகா சாகக்கிடக்கும் தருவாயில் அவர்கள் அப்பத்தை தூக்கி எறிந்து கிருஸ்துமஸ் விழா கொண்டாடுவது போன்ற காட்சிகளில் அவர் இரக்கமற்றவர் போல காட்டப்பட்டிருப்பது கொடுமை. மலேரியா நோயினால் தோட்டத் தொழிலாளிகள் ஒருவர் பின் ஒருவராக இறந்து விழுந்துகொண்டிருக்க, அந்த மருத்துவ தம்பதியோ மதம் மாற்றுவதற்குக் கிடைத்த நல் வாய்ப்பாக அதைக் கண்டு மகிழ்கிறார்கள். இந்தக் காட்சிகளின் செயற்கைத்தன்மை படத்தின் ஒட்டுமொத்த உணர்வை கீழிறக்கிவிடுகின்றன.
மருத்துவமும் கல்வியறிவும் கிறிஸ்துவ மிஷினரிகள் இன்றி இந்தியாவில் இந்த அளவிற்கு வளர்ந்திருக்காது என்கிற வரலாற்று உண்மைக்கு மாறாக, கிறுஸ்தவர்கள் மதப்பிரச்சாரம் மட்டுமெ செய்தார்கள் மருத்துவமே செய்யவில்லை என்கிறது பரதேசி. நிஜத்தில் இந்தப் படத்தின் உருவாக்கத்துக்கு மூல காரணமாக நாவலை எழுதிய டேனியலின் சாயலில் அந்தக் கேவலமான மருத்துவர் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. 1925-ல் மக்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை நாவலில் விவரித்திருந்த டேனியல் உண்மையில் 1940-ல்தான் தேயிலைத் தோட்டத்துக்குச் சென்றிருப்பார். எனவே, படத்தில் 1940-ல் வரும் மருத்துவராகக் காட்டப்பட்டிருப்பவர் டேனியலின் சாயலில் படைக்கப்பட்டவர்தான் என்று நம்பமுகாந்தரமிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், நாவலில் அந்த கதாபாத்திரம் பேசும் வசனங்களில் சிலவற்றை அப்படியே திரைப்பட மருத்துவரும் பேசுகிறார். இது கிட்டத்தட்ட டேனியல்தான் அந்த மருத்துவர் என்று உறுதிப்படுத்தும்விதமாகவே இது இடம்பெற்றிருகிறது. அதிலும் அந்த டாக்டர் பரிசுத்தத்துக்கு அம்பேத்கர் போன்ற உடை அணிவித்திருப்பது மிகவும் கொடுமை. ஆக மொத்தத்தில் இந்த நாவல் சரியான முறையில் திரைப்படமாக்கப்படவில்லை.

                   திரைப்படத்திற்க்கு அடிப்படை எழுத்து, அத்தகைய நாவலை திரைப்படமாக எடுக்கும் போது அதன் மீதான எதிர்பார்ப்பு என்பது அதிகமாகிறது. பரதேசி திரைப்படம் குறித்தும் அவ்வாறான ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. நாவலை படிக்காமல் இந்த திரைப்படத்தை பார்ப்பவர்களுக்கு ஒரு தவறான தகவலே இங்கு பரிமாறப்பட்டுள்ளது. மேலும் ஆழமான வரலாறு ஒன்று அழுத்தம் ஏதுமின்றி மென்மையாக வியாபார ரீதியாக படமாக்கப்பட்டுள்ளது. சமூகம் சார்ந்த ஒரு நாவலை திரைப்படமாக்கும் போது துளியளவாவது சமுதாய அக்கறையுடன் செயல்பட்டிருக்கலாம். ஒரு நாவல் திரைப்படமாகும் பொழுது அதன் வடிவமைப்பில் சில தேவையான மாற்றங்கள் செய்யப்படுவது என்பது தேவை தான் ஆனால் அதன் சாராம்சத்தையே குலைப்பது என்பது தவறு. இந்த பரதேசி திரைப்படத்திலும் அத்தகைய தவறே. இலக்கியங்களி படிக்கும் பொழுது நம் சிந்தனைகள் பரந்த சிந்தனைகளாக செதுக்கப்படும் ஆனால் இங்கு நடந்திருப்பது அத்தகைய மாற்றம் தானா என்பது கேள்விக்குறி. நாவல் வேறுசினிமா வேறு என்பது உண்மைதான். ஆனால், நாவலை சினிமாவாக ஆக்கும்போது எதையெல்லாம் தக்கவைத்துக் கொள்கிறீர்கள்எதையெல்லாம் புதிதாகச் சேர்க்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். அதுதான் உங்கள் செயலை நியாயப்படுத்த முடியும். வெறுமனே திரைப்படத்தில் செய்திருப்பவை எல்லாம் காட்சி ஊடகத்துக்காகச் செய்யப்பட்டவை என்று சொல்லிக்கொள்வது சரியல்ல.மொத்தத்தில் இந்த திரைப்படம் ஒரு அதிருப்தியையே தருகிறது                                                  

No comments:

Post a Comment