ஜெயலலிதா வாழ்வில் வெள்ளி முளைக்கிறது!
தலைவிரி கோலமாக சட்டமன்றத்துக்குள் இருந்து அவர் வெளியில் ஓடி வந்ததும், இன்று யாரும் எட்ட முடியாத தனிப் பெரும் சக்தியாகத் தலை நிமிர்ந்து நிற்பதற்கும் இடையில் 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழ்நாடு சட்டமன்றத்துக்குள் 1989-ம் ஆண்டு நுழைந்தார் ஜெயலலிதா. இதோ, கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஜூலை 10-ம் தேதி நுழைய இருக்கிறார். அவரது சட்டமன்ற வரலாற்றின் வெள்ளி விழா ஆண்டு, ஜூலை 10 முதல் தொடங்கவிருக்கிறது!
இந்த 25 ஆண்டில் சுமார் 13 ஆண்டுகள் தமிழக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருந்தார். சில ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையிலும் இருந்தார். ஐந்து ஆண்டுகள் இரண்டையுமே இழந்து, சட்டமன்றத்துக்குள்கூட வர முடியாமல் மக்கள் மன்றத்தால் தோற்கடிக்கப்பட்டுக்கிடந்தார். அவரது வாழ்க்கையில் மட்டுமல்ல, தமிழக அரசியலிலும் இது ஒரு நீண்ட காலகட்டம்தான்.
1996-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவரால் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் மட்டுமல்ல, அவருமே தோற்று நின்றபோது ஆங்கிலப் பத்திரிக்கைக்கு ஒரு பேட்டி அளித்தார். ‘உங்களின் மிகப் பெரிய சாதனை?’ என்ற கேள்விக்கு, ‘நான் பிழைத்திருப்பது. வாழ்க்கையில் நான் நிறைய அடிபட்டிருக்கிறேன். வேறு யாராவதாக இருந்தால், இந்நேரம் தற்கொலை செய்துகொண்டிருப்பார்கள். நான் ஓர் இக்கட்டில் இருந்து இன்னோர் இக்கட்டு என்று போராடியிருக்கிறேன்’ என்று சொன்னார். அந்த இக்கட்டுகள் இவராக உருவாக்கிக்கொண்டதா, எதிரிகள் உருவாக்கியதா என்ற விமர்சனத்தை விலக்கிவிட்டுப் பார்த்தால், அவரது இந்த 25 ஆண்டுகள், சிகர மேடுகளும் அசுரப் பள்ளத்தாக்குகளும் நிறைந்தவை.
தலைவிரி கோலத்தில்…
1989-ம் வருடம், 14 ஆண்டு வனவாசத்துக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்த பெருமிதத்துடன் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யத் தொடங்குகிறார் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி. ‘ராஜினாமா செய்கிறேன்’ என ஜெயலலிதா எழுதியதாகச் சொல்லப்பட்ட கடிதம் ஒன்றை போலீஸார் எடுத்து வெளியிட்டதாகப் பிரச்னை கிளம்பியது. நிதிநிலை அறிக்கையை வாசிப்பதற்கு முன்னதாக, தனக்கு நீதி வேண்டும் என்று சட்டமன்றத்துக்குள் எழுந்து கேட்டார் ஜெயலலிதா.
‘இது முதலமைச்சர் தூண்டுதலின் பேரிலே நடந்திருக்கிறது. முதலமைச்சர் இன்று பட்ஜெட் தாக்கல் செய்ய இருப்பதால், கிரிமினல் ஆக்ட் புரிந்த குற்றத்துக்காக அவர் பதவி விலக வேண்டும்’ என்றார். உடனே பிரச்னைக்குத் தீ மூட்டப்பட்டது. ‘குறிப்பிட்ட நாளில் வரவு- செலவுத் திட்டம் தாக்கல் செய்ய வேண்டும். எனவே, வேறு விவகாரங்களுக்கு இடம் இல்லை’ என்று தீர்ப்பளித்த பேரவைத் தலைவர் தமிழ்க்குடிமகன், முதலமைச்சர் கருணாநிதியைப் பேச அழைக்கிறார்; கருணாநிதி ஆரம்பிக்கிறார். கூச்சல், குழப்பம் ஏற்படுகிறது. இரண்டு பக்கமும் அமளிதுமளி நடக்கின்றன. மைக் உடைகிறது; டேபிள் வெயிட், செருப்பு, புத்தக வீச்சுகள் நடக்கின்றன; ரத்தம் சிந்துகிறார்கள் சிலர். ‘அடிடா… குத்துடா..!’ என குரல்கள். தொடர்ந்த சம்பவத்தை நேரில் பார்த்த நேர்மையான சாட்சிகள்தான், உண்மையை முழுமையாக அறிவார்கள்.

1991-ல் நடந்த தேர்தலில் ஜெயலலிதாவின் பிரசாரம் இதை மையப்படுத்தியே இருந்தது. ‘1989-ம் வருடம் மார்ச் மாதம் 25-ம் தேதி சென்னை சட்டமன்றத்தில் நடந்த கொடுமையான நிகழ்ச்சிகளை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். மகாபாரதக் கதையில் துரியோதனன் சபையில் பாஞ்சாலி பட்ட துயரினும் கூடுதலான துயரத்தை, அன்றைக்கு நான் கொடுமைக்கார கருணாநிதி கட்சியினரால் அனுபவிக்க நேர்ந்தது. சட்டமன்றத்துக்குள் என்னைக் கொடுமைப்படுத்திய துச்சாதனன் யார்? அன்றைக்கு பாஞ்சாலிக்குத் துணையிருக்க கிருஷ்ணன் வந்தார். இன்றைக்கு கலியுகம், கிருஷ்ணனாக என் கண் முன் தமிழ் மக்கள் தெரிகிறார்கள். உங்களை நம்பி நான் இருக்கிறேன். துணை நிற்பீர்களா?’ எனக் கேட்டார் ஜெயலலிதா. இப்படி ஜெயலலிதாவின் சட்டமன்ற நுழைவே ஆக்ஷன் அத்தியாயமாகத்தான் இருந்தது. அதுவே இன்று வரை தொடர்கிறது!
தலைகால் புரியாத ஆட்டத்தில்…
‘இனி இந்தச் சபைக்குள் முதலமைச்சராகத்தான் வருவேன்’ என்று சபதம் போட்டவராக வெளியேறிய ஜெயலலிதா, அதில் வென்றவராகவே மீண்டும் சட்டமன்றம் நுழைந்தார். கலைந்த தலை, கிழிக்கப்பட்ட சேலையுடன் வெளியேறியவர், 1991-ம் ஆண்டு மே மாதம் சபைக்குள் நுழையும்போது ஓவர் கோட், அதுவும் அணிந்திருந்த சேலையின் துணியிலேயே அணிந்து உள்ளே வந்தார். எதிர்பாராத முதல் வெற்றி, கண்களை மறைக்கும் அல்லவா? அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடத் தெரியாமல் கொண்டாடினார்.
பேரவைத் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட சேடப்பட்டி முத்தையா, ஜெயலலிதாவின் காலில் விழுந்து வணங்கியதில் தொடங்கியது வினை விளையாட்டு. ‘இஷ்ட தெய்வத்தை வணங்கிவிட்டுச் செல்வதுபோல் நான் சென்றேன். இது தவறு இல்லை’ என்றார் முத்தையா. அவர் காட்டிய பாதையில் மோசமான பயணம், புகழ்ச்சிக்கும் தற்புகழ்ச்சிக்கும் தாரைவார்க்கப்பட்ட காலமாக மாறியது. புரட்சித் தலைவியைப் புகழ்ந்துவிட்டு யாரும் ‘எதுவும்’ செய்யலாம் என்ற காலம் ஆனது.
பிற்காலத்தில் ஜெயலலிதாவே ஒப்புக்கொண்டதுபோல, அவருக்குத் தெரியாமலேயே பெரும்பாலானவை நடந்தன. ‘எல்லா தகவல்களும் தேர்தல் முடிந்த பிறகு மிகவும் தாமதமாகத்தான் என்னை வந்தடைந்தன!’ என்றார் ஜெயலலிதா. மக்கள் வைத்த மகத்தான நம்பிக்கை அனைத்தையும் அறியாப் பக்குவத்தால், 1996-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றியை இழந்தார் ஜெயலலிதா.
தனியாக உட்கார்ந்து யோசித்ததில்…
1996-2001 ஐந்து ஆண்டு காலம் அவரால் சட்டசபைக்கு உள்ளே போக முடியவில்லை. ஆனால், 28 நாட்கள் சிறை ‘உள்ளே’ இருந்தார். முந்தைய ஐந்து ஆண்டுகால ஆட்சியில் உண்மையில் என்ன நடந்தது என்பதை கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்தார். அவருக்குத் தெரியாமல் நடந்திருக்கலாம். ஆனால், அனைத்துக்கும் பொறுப்பேற்க வேண்டிய நெருக்கடி அவருக்கு மட்டுமே ஏற்பட்டது.
‘என் உள்முகமான இயல்பை ஆணவம் என்று தவறாகப் புரிந்துகொண்டார்கள். கட்சிக்காரர்களுடன் எனக்குத் தொடர்பு இல்லாமல்போனது. வெளியிலுள்ள உண்மையான நிலவரத்தோடும் தொடர்பு இல்லாமல்போனது. கட்சியே துருப்பிடித்துப் போய்விட்டது. அதிகார வெறியர்கள், பிசினஸ்காரர்கள் கையில் கட்சி விழுந்துவிட்டது. நான் முழுக்க முழுக்க சூழ்நிலையின் பலிகடா என்று சொல்வேன்’ என்ற தன்னிலை விளக்கங்கள், நீதிமன்றங்களில் எடுபடவில்லை. தனி நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்குவதே அவரது கடமையும் பொழுதுபோக்குமாக ஆகிப்போனது.
தன் கஷ்ட காலத்துக்குக் காரணமான அத்தகைய சக்திகளிடம் இருந்து விலகி நிற்க நினைத்தார்; விலக்க முடியவில்லை. ஆனால், ஓரளவு ஆதிக்கத்தையேனும் கட்டுப்படுத்தினார். அடுத்து அவர் எதிர்கொண்ட 2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல், அவரைப் பொறுத்தவரை அக்னிப்பரீட்சை. ஆனால், கருணாநிதிக்கு எதிரான அரசியல் சக்திகள் அனைத்தையும் தனக்குப் பின்னால் கூட்டி, வெற்றிகளைச் சாத்தியம் ஆக்கினார்!

பக்திப் பரவசத்தில்…
‘போரில் வெற்றி; ஆனால் மன்னருக்கு வாயில் புண்’ – என்பதைப் போல 2001 தேர்தலில் மகத்தான வெற்றியை அ.தி.மு.க அடைந்தது. ஆனால், நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்ததால் போட்டியிடும் வாய்ப்பை இழந்து எம்.எல்.ஏ ஆக முடியாத சூழ்நிலை ஜெயலலிதாவுக்கு. எம்.எல்.ஏ ஆக முடியாவிட்டாலும் அவர்தானே முதல்வராக இருக்க முடியும். பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
‘அரசு ஊழியர் ஒருவர் அரசு சொத்தை வாங்கக் கூடாது’ என்ற விதியை மீறி டான்சி நிலத்தைப் பெற்ற வழக்கில் மூன்று ஆண்டு காலம் தண்டனை பெற்றிருப்பதைக் காரணம் காட்டி, அவரது பதவிப்பிரமாணம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே, முதல்வர் பதவி பறிபோனது. அப்போது உட்காரவைக்கப்பட்டவர்தான் ஓ.பன்னீர்செல்வம். 162 நாட்கள் தமிழகத்தின் முதல்வர் அவர். ‘அரசு சொத்தை அரசு ஊழியர் வாங்கக் கூடாது’ என்பது விதியே தவிர, சட்டம் அல்ல என்று தீர்ப்பு வந்ததால், நிரபராதி ஆனார் ஜெயலலிதா. ஆண்டிப்பட்டியில் நின்று, வென்று, மீண்டும் முதல்வர் ஆனார்!

அதே சமயம், சட்டமன்ற விவாதங்களில் பெருமளவு ஆர்வத்துடன் பங்கெடுக்க ஆரம்பித்தார். எல்லா பிரச்னைகளின் வரலாற்றையும் தெளிவாகப் படித்துவிட்டு வந்து குறிப்புகளே இல்லாமல் பேச ஆரம்பித்தார். எதிர்க்கட்சியான தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்கள் அனைவருக்கும் விரிவாகப் பதில் சொன்னார். 1991-96 காலத்துடன் ஒப்பிடும்போது, மாறுபட்ட ஜெயலலிதாவாகவே சபையில் நடந்துகொண்டார்.
தனி மனுஷியாக பயம் இல்லாமல்…
2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் ஆட்சியை இழந்தாலும், 61 தொகுதிகளை அ.தி.மு.க கைப்பற்றியது. 60 உறுப்பினர்களும் சபையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். அதற்கு மறுநாள் (2006, மே 29) தனி ஓர் ஆளாக சபைக்குள் நுழைந்தார். பழைய ஞாபகங்கள் அதிகம் உள்ளவர் என்பதால், முதலமைச்சர் கருணாநிதி, சபை வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பைப் பலப்படுத்தி இருந்தார். உள்ளே நுழைந்த ஜெயலலிதா, வருகைப் பதி வேட்டில் பெயரைத் தேடினார் ‘ஜெ’ என்பதால் தமிழ் வரிசைப்படி கடைசியில் இருந்தது. கையெழுத்துப் போட்டு உள்ளே வந்தவர், கையில் எடுத்துவந்த கேள்விகளை வரிசையாக அடுக்கினார். முதலமைச்சர் கருணாநிதி, அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, ஐ.பெரியசாமி… என எல்லா அமைச்சர்களும் எழுந்து எழுந்து பதில் சொல்லும் அளவுக்கு டிரில் வாங்கினார். இவரைத் தொடர்ந்து பேசவிடாமல் அமைச்சர்கள் எழுந்தார்கள். ஆனாலும் எரிச்சல் அடையாமல் கேள்விகளை எழுப்பினார். கோபப்படுத்தும் வார்த்தை ஒன்றை அன்பழகன் சொன்னபோதும், அமைதியாகத் தொடர்ந்தார்.
‘விரைவில் பேச்சை முடியுங்கள்’ என்று பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் சொல்ல, ‘இன்னும் பேச வேண்டியவை நிறைய இருக்கின்றன’ என்று ஜெயலலிதா பதில் அளிக்க, ‘கடைசிப் பக்கத்தை எடுத்து வாசிங்க…’ என்று ஆவுடையப்பன் கிண்டலடித்தபோதும், சீற்றம் காட்டாமல் அமைதியாகத் தொடர்ந்ததுதான் அவரது பக்குவத்தின் வெளிப்பாடு. பழைய ஜெயலலிதாவாக இருந்திருந்தால் குறிப்பைத் தூக்கி வீசி இருப்பார். ஆனால், அப்போதே எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, வெற்றி-தோல்வியைச் சமமாக பாவிக்கும் மனம்கொண்டவராகப் பக்குவம் அடைந்திருந்தார்!
வரலாற்றில்…
வலிமையானதுதான் வரலாற்றில் நிலைக்கும். அப்படிச் சிலவற்றை ஜெயலலிதா செய்துகாட்டி இருக்கிறார். இட ஒதுக்கீடுகள் அனைத்தும் 50 சதவிகிதத்துக்கு மேல் போகக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தபோது, 69 சதவிகிதத்துக்கு மேல் வகுப்புவாரி உரிமை தந்துகொண்டிருந்த தமிழகத்துக்குச் சிக்கல் வந்தது. அப்போது, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள் மசோதா (1993) என்ற சட்டத்தை நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று, அரசியலமைப்பு சட்டத்தின் 9-வது அட்டவணையில் இணைத்தார் ஜெயலலிதா.
தனித் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், இலங்கை மீதான போர்க் குற்றத்துக்கு விசாரணை தேவை என்றும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்வது என்றும் ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானங்கள் காலத்துக்கும் நிற்பவை. ‘மத்திய அரசின் அடிமை சமஸ்தானங்களாக மாநிலங்கள் இருக்க முடியாது’ என்று அவர் பேசிய மாநில சுயாட்சிப் பேச்சுகள், முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்னையில் தமிழக உரிமையை நிலைநாட்டுபவை. ‘கெய்ல்’ எரிவாயு குழாய் பதிவுக்கு எதிரான அவரது குரல், விவசாயிகளின் மனக்குமுறலாக இருந்தது.
இப்படி பல்வேறு விமர்சனங்களுக்கும் வருத்தங்களுக்கு மத்தியில் தமிழகச் சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் வெள்ளி விழா வருகிறது.
‘எல்லோரும் என்னை, அவர்களது வயது என்னவாக இருந்தாலும் ‘அம்மா’ என்று அழைப்பதையே பெருமையாகக் கருதுகிறேன்!’ என்று ஜெயலலிதா சொல்லிக்கொண்டார். சிலர் பாசத்தால் சொல்கிறார்கள்; சிலர் பயத்தால் சொல்கிறார்கள். சிலர் வேறு வழி இல்லாமல் சொல்கிறார்கள்.
ஆனால், அனைவரும் அதை உளமார்ந்த அன்போடு உண்மையாகச் சொல்ல, உதாரணமான ஓர் ஆட்சியை ஜெயலலிதா நினைத்தால் தர முடியும். என்ன… அவர் நினைக்க வேண்டும்… அவ்வளவே!
No comments:
Post a Comment