Saturday, 18 June 2016

இந்தியா, கடந்த, 68 ஆண்டுகளில், வெறும் 17 கலைப் பொருட்களை மட்டுமே மீட்டுள்ளது.

சிலைகள் மீட்பில் இன்னும் வேகம் தேவை: சொல்கிறார் சிலை மீட்பு ஆர்வலர் விஜய்குமார்



இந்தியாவில் கொள்ளையடிக்கப்பட்ட 200 சிலைகளை, இந்திய அரசிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையின் துவக்கமாக, சமீபத்தில், அமெரிக்கா சென்றிருந்த இந்திய பிரதமர் மோடியிடம், மாணிக்கவாசகர், ஸ்ரீபுரந்தான் விநாயகர் உட்பட ஆறு சிலைகளை அமெரிக்க அரசு ஒப்படைத்தது.
இதன் பின்னணியில், 'இந்தியா பிரைட் புராஜக்ட்' என்ற தன்னார்வலர் குழுவின் பெரும் முயற்சியே அஸ்திவாரமாக இருந்தது என்பது வெளியில் தெரியவாய்ப்பில்லை.ஆஸ்திரேலியாவிலிருந்து, விருத்தாசலம் அர்த்தநாரீஸ்வரர் கற்சிலை, ஸ்ரீபுரந்தான் நடராஜர் உற்சவர் சிலை, சிங்கப்பூரில் இருந்து உமா உற்சவர் சிலை ஆகியவை மீட்பில், 'இந்தியா பிரைட் புராஜக்ட்' குழுவின் பங்களிப்பு முதன்மையானது. அந்த குழுவின் நிறுவனர்களில் ஒருவரும், இந்திய கலைப் பொருட்கள் மீட்பில் பல ஆண்டுகளாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளவரும், சிங்கப்பூரில் வசிப்பவருமான விஜய்குமார், சமீபத்தில் சென்னை வந்திருந்தார். சிலைகள் மீட்பில், இந்தியா இன்னும் அதிவேகமாக செயல்பட வேண்டும் என்ற அவர், அளித்த சிறப்பு பேட்டி:


'இந்தியா பிரைட் புராஜக்ட்' குழு தான் கடத்தல் சிலைகள் மீட்பில் ஈடுபட்டுள்ளது என கூறப்பட்டாலும், அதில் பங்களிப்போர் பற்றி வெளியுலகுக்குத் தெரியவில்லையே ஏன்?



உண்மை தான். 'இந்தியா பிரைட் புராஜக்ட்' குழு தான், சில ஆண்டுகளாக சிலை கடத்தல் பற்றி பல்வேறு ஆதாரங்களை சேகரித்து, இந்திய அரசுக்கும் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு அரசுகளுக்கும் தெரியப்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, கொள்ளை போன இந்திய கலைச் செல்வங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நாடு திரும்பி வருகின்றன.எங்கள் குழுவில், பிரதானமாக 20 பேர் உள்ளனர். அவர்கள் தவிர, 200க்கும் அதிகமான, தன்னார்வலர்கள் உள்ளனர். அவர்களில் பாதிப் பேர் இந்தியர்கள். மீதிப் பேர் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோர். அவர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். எங்கள் பணி நேரம் போக, மீதி நேரத்தை, கலைச் செல்வங்களை மீட்பதில் செலவிட்டு வருகிறோம்.எங்கள் குழுவின் சார்பில், தற்போதைக்கு எனது பெயரும் பணியும் மட்டுமே வெளியில் தெரிகின்றன. மற்றவர்கள், பல்வேறு காரணங்களால் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. இதுகுறித்து எங்கள் குழுவின் இணையதளத்தில், வெளிப்படையாகவே அறிவித்துள்ளோம்.


சமீபத்தில் தீனதயாள் கைது செய்யப்பட்டது தொடர்பாக உங்கள் குழுவினர் என்ன கருதுகின்றனர்?


தீனதயாள் ஒரு அறிவிக்கப்பட்ட குற்றவாளி. அவர் சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரோடு தொடர்பு வைத்திருந்தவர். தீனதயாளைப் போல், கபூரோடு இந்தியா முழுவதும் தொடர்பு வைத்திருந்தோர் பலர். அவர்கள் தங்கள் கலைப் பொருட்கள் விற்பனைக் கூடங்களில், இதுபோல
ஆயிரக்கணக்கான சிலைகளை பதுக்கி வைத்துள்ளனர். இங்கு நம் முன் எழும் கேள்வி, அறிவிக்கப்பட்ட குற்றவாளி ஒருவர், பல ஆண்டுகளாக, ஒரு பெரிய நகரின் மத்தியில், எப்படி இவ்வளவு சிலைகளை பதுக்கி வைத்து இருந்தார்; விற்று வந்தார்; ஏன் இவ்வளவு நாளாக பிடிபடவில்லை என்பது தான்.இதில் வேடிக்கை என்னவென்றால், இவ்வளவு சிலைகளும் திருடு போனது குறித்து ஒரு புகார் கூட பதிவு செய்யப்படவில்லை. நம் வீட்டில் ஒரு பொருள் திருடு போனால் நாம் இப்படி இருப்போமா; ஆனால், நம் நாட்டிற்குள் புகுந்து நம் கடவுள் சிலைகளை திருடிக் கொண்டு செல்கின்றனர். நாம் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.ஏன்? விசாரணை, அது இது என தாம் அலைக்கழிக்கப்படுவோமோ என்ற பயம் தான் காரணம். இதற்கு ஒரு எளிய தீர்வும் உள்ளது. கோவில்களில் உள்ள சிலைகளை, முறையாக புகைப்படம் எடுத்து, ஆவணமாக்க வேண்டும். அதன் ஒரு நகல், அந்தந்த கோவில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருக்க வேண்டும். ஆவணங்களை, பொதுமக்கள் பார்வைக்கு இணையதளத்தில் வைத்து விட்டால், எவரும் சிலைகளை தொடவே அஞ்சுவர். ஆனால், இந்த வேலை இன்னும் நடக்கவில்லை. நாம் இன்னும் செல்ல வேண்டிய துாரம் எவ்வளவோ இருக்கிறது என்பது தான் எங்கள் கருத்து.


தங்களது கலைச் செல்வங்களை மீட்பதில் பிற நாடுகள் எப்படி செயல்படுகின்றன?



தீவிரமாக... மிகத் தீவிரமாக செயல்படுகின்றன. இத்தாலி, கடந்த 25 ஆண்டுகளில் மட்டும் தங்களது மூன்று லட்சம் கலைப் பொருட்களை மீட்டுள்ளது.
இந்தியா, கடந்த, 68 ஆண்டுகளில், வெறும் 17 கலைப் பொருட்களை மட்டுமே மீட்டுள்ளது. இத்தாலி, தனது பாதுகாப்புத் துறையின் கீழ், சிலை கடத்தலை தடுக்க ஒரு தனி அமைப்பையே ஏற்படுத்தி உள்ளது. அதில், 3,000 பேர் பணிபுரிகின்றனர். நவீன கணினி தொழில்நுட்ப வல்லுனர்கள், வழக்கறிஞர்கள், காவலர்கள் என பல துறைகளைச் சேர்ந்தவர்கள் அந்த பிரிவில் உள்ளனர். அவர்களது வேலையே கடத்தலை தடுப்பது மட்டும் தான். இந்த அமைப்பை, கலை, பண்பாட்டுத் துறையின் கீழ் வைக்காமல், பாதுகாப்புத் துறையின் கீழ் வைத்துள்ளது
இத்தாலி. இந்தியாவில், தொல்லியல் துறை மட்டுமே, சிலை கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. மேலும், ஒரு சிலை, இரு சிலைகளை மீட்பது என்ற கதையெல்லாம் இத்தாலியிடம் கிடையாது. யார் திருட்டு சிலைகளை வாங்குகின்றனரோ அவர் மீதே வழக்கு தொடர்ந்து, அவரது தொழிலின் எதிர்காலத்தையே சிதைத்து விடுவது தான் அந்நாட்டு அரசின் பாணி.
உலகளவில் உள்ள பெரிய பெரிய கலைப் பொருட்கள் விற்பனைக் கூடங்களில் தங்கள் நாட்டைச் சேர்ந்த பொருள் விற்பனைக்கு வந்தால், அது கடத்தப்
பட்டது என்பது தெரியவந்தால், கம்போடிய அரசு உடனடியாக அதைத் தடுத்து நிறுத்தி விடும். பின் சிறிது காலத்தில் மீட்டு விடும். மீட்ட பொருட்களுக்கு அந்த நாடு மிகவும் மரியாதை செலுத்தி ஒரு கொண்டாட்டத்தையே நடத்தி விடும். அதேபோல், எகிப்து உள்ளிட்ட நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
ஆனால் இந்தியாவில் அப்படி அல்ல. 10 ஆயிரம் சிலைகளை கடத்திய ராஜஸ்தானைச் சேர்ந்த வாமன் கியா என்ற சிலை கடத்தல் மன்னனை, 'அவன் சிலை கடத்தினான் என்பதற்கு ஆதாரம் இல்லை' என கூறி, 2013ல் அரசு விடுவித்து விட்டது. அவனிடம் இருந்து, இதுவரை ஒரு சிலை கூட மீட்கப்படவில்லை. அடுத்த மூன்று ஆண்டுகளில், அவன் மீது, அரசு தரப்பில் அப்பீல் கூட செய்யப்படவில்லை. இந்தியா, தனது கலைச் செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட்டாலும் அதைப் பற்றி கவலையேபடாது என்ற தோற்றத்தை, இந்த சம்பவம் உலகளவில் ஏற்படுத்தி விட்டது. சுபாஷ் கபூர் வாக்குமூலத்தின் அடிப்படையிலும், இதுவரை ஒரு சிலைகூட மீட்கப்படவில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.சமீபத்தில், 200 சிலைகள் ஒப்படைப்பு முயற்சி கூட, 'இந்தியா பிரைட் புராஜக்ட்' குழுவின் வெற்றி தான். இதை அமெரிக்க அரசே தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறை சிறப்பு விசாரணை அதிகாரி பிெரன்டன் ஈஸ்டர், 'பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனம் போன்ற தனி அமைப்புகள், நிபுணர்கள், ஆவணங்கள், புகைப்படங்களை சேகரித்து தந்திருக்காவிட்டால், சிலைகள் மீட்பு இன்னும் தாமதமாகி இருக்கும்' என்று கூறியிருக்கிறார்.


சிலை கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் அமெரிக்கா எப்படி செயல்படுகிறது?


கடந்த, 2007ம் ஆண்டு ஒரு கன்டெய்னர், கப்பல் மூலம், மும்பையில் இருந்து நியூயார்க்கிற்கு செல்கிறது. அதில் பிரச்னை இருக்கிறது என, இந்திய வருவாய் புலனாய்வு துறை, அமெரிக்க அரசுக்கு தகவல் தெரிவிக்கிறது. நியூயார்க்கில் அந்த கப்பலில் உள்ள கன்டெய்னர் கைப்பற்றப்படுகிறது. அதற்கு முன்பாகவே சுபாஷ் கபூர், அதற்கும் தனக்கும் தொடர்பில்லை என, அறிவிக்கிறான். அதையடுத்து என்ன நடந்தது என வெளியுலகிற்கு தெரியவில்லை. அதிகாரிகள் கன்டெய்னரை திறந்து பார்த்தால், அதில் அவ்வளவும் சிலைகள். யாரும் அவற்றிற்கு உரிமை கோராததால், அமெரிக்காவின் சுங்கத் துறை பாதுகாப்பில் அந்த சிலைகள் வைக்கப்படுகின்றன. கடந்த, 2009ல், சிறப்பு விசாரணை அதிகாரி, பிரென்டன் ஈஸ்டர் விசாரிக்கிறார். சுபாஷ் கபூரின் மேலாளர் ஒருவரை பிடிக்கின்றனர். இரு ஆண்டுகளாக விசாரணை தொடர்கிறது.
அதன் தொடர்ச்சியாக, 2011ல், ஜெர்மனியில், சுபாஷ் கபூர் பிடிபடுகிறான். அந்தளவிற்கு அவர்கள் தீவிரமாக தொடர்ந்து செயல்படுகின்றனர்.



உங்கள் குழுவின் தொடர் நடவடிக்கைகள், கலைப் பொருட்கள் விற்பனை உலகில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன?


இப்போது உலகளவில், இந்திய கலைச் செல்வங்களை ஏலம் விடுவது ஓரளவிற்கு குறைந்துள்ளது என்று கூறலாம். அதுவும், மியூசியங்கள் இந்த விஷயத்தில் தற்போது உஷாராகி விட்டன. ஆனால், கலைச் செல்வங்களை வாங்கும் தனிநபர்களை நாம் கண்காணிக்க முடியாது. அவர்களாகவே முன்வந்து, தாங்கள் வாங்கிய சிலை கடத்தப்பட்டது தான் எனக் கூறி, ஒப்படைத்தால் தான் உண்டு. அப்படித் தான் அமெரிக்காவில் ஒருவர் மாணிக்கவாசகர் சிலையை கொண்டு வந்து கொடுத்தார்.
'வாமன் கியா போல், சுபாஷ் கபூரும் விரைவில் வெளிவந்து விடுவார். நாம் வழக்கம் போல் கடத்தல் சிலைகளை வாங்கலாம்' என, கலைப் பொருட்களை சேகரிக்கும் தனி நபர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.


சிலை கடத்தல் விவகாரங்களில், ஊடகங்கள் எந்தளவுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன?


'தி ஆஸ்திரேலியா' பத்திரிகை, தனது முதல் பக்கத்தில், அர்த்தநாரீஸ்வரர் சிலை குறித்து பெரியளவில் செய்தியை வெளியிட்டது. இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டாலும், போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. சுபாஷ் கபூர் கைது நடவடிக்கை, ஏதோ தமிழகத்தோடு தொடர்புடைய செய்தி என, வடமாநிலங்களில் பார்க்கப்படுகிறது. மோடியிடம் 200 சிலைகள் ஒப்படைக்கப்பட்ட செய்தி, வெறும் செய்தியாக மட்டுமே வந்தது. அதன் பின்னணி என்ன, ஏன் இத்தனை ஆண்டுகள் ஆனது என்பது போன்ற விவரங்களை எல்லாம் எந்த நாளிதழும் வெளியிடவில்லை. அதை வெளியிட்டால் தான், சிலை மீட்பின் அருமை மக்களுக்கு தெரியவரும்.ஸ்ரீபுரந்தான் விநாயகரைப் பொறுத்தவரை முதன்முறையாக, 'தினமலர்' நாளிதழில் தான், 'அமெரிக்காவில் அனாதையாக இருக்கும் விநாயகர்' என்ற செய்தி வெளியானது. அதன் விளைவாக, இன்று அவர் தனது அப்பாவோடு சேர உள்ளார். அம்மாவும் சிங்கப்பூரில் இருந்து வந்தாகி விட்டது. விரைவில், முருகனும் வந்து விடுவார்.

No comments:

Post a Comment