Saturday, 18 June 2016

இந்தியா, கடந்த, 68 ஆண்டுகளில், வெறும் 17 கலைப் பொருட்களை மட்டுமே மீட்டுள்ளது.

சிலைகள் மீட்பில் இன்னும் வேகம் தேவை: சொல்கிறார் சிலை மீட்பு ஆர்வலர் விஜய்குமார்



இந்தியாவில் கொள்ளையடிக்கப்பட்ட 200 சிலைகளை, இந்திய அரசிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையின் துவக்கமாக, சமீபத்தில், அமெரிக்கா சென்றிருந்த இந்திய பிரதமர் மோடியிடம், மாணிக்கவாசகர், ஸ்ரீபுரந்தான் விநாயகர் உட்பட ஆறு சிலைகளை அமெரிக்க அரசு ஒப்படைத்தது.
இதன் பின்னணியில், 'இந்தியா பிரைட் புராஜக்ட்' என்ற தன்னார்வலர் குழுவின் பெரும் முயற்சியே அஸ்திவாரமாக இருந்தது என்பது வெளியில் தெரியவாய்ப்பில்லை.ஆஸ்திரேலியாவிலிருந்து, விருத்தாசலம் அர்த்தநாரீஸ்வரர் கற்சிலை, ஸ்ரீபுரந்தான் நடராஜர் உற்சவர் சிலை, சிங்கப்பூரில் இருந்து உமா உற்சவர் சிலை ஆகியவை மீட்பில், 'இந்தியா பிரைட் புராஜக்ட்' குழுவின் பங்களிப்பு முதன்மையானது. அந்த குழுவின் நிறுவனர்களில் ஒருவரும், இந்திய கலைப் பொருட்கள் மீட்பில் பல ஆண்டுகளாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளவரும், சிங்கப்பூரில் வசிப்பவருமான விஜய்குமார், சமீபத்தில் சென்னை வந்திருந்தார். சிலைகள் மீட்பில், இந்தியா இன்னும் அதிவேகமாக செயல்பட வேண்டும் என்ற அவர், அளித்த சிறப்பு பேட்டி:


'இந்தியா பிரைட் புராஜக்ட்' குழு தான் கடத்தல் சிலைகள் மீட்பில் ஈடுபட்டுள்ளது என கூறப்பட்டாலும், அதில் பங்களிப்போர் பற்றி வெளியுலகுக்குத் தெரியவில்லையே ஏன்?



உண்மை தான். 'இந்தியா பிரைட் புராஜக்ட்' குழு தான், சில ஆண்டுகளாக சிலை கடத்தல் பற்றி பல்வேறு ஆதாரங்களை சேகரித்து, இந்திய அரசுக்கும் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு அரசுகளுக்கும் தெரியப்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, கொள்ளை போன இந்திய கலைச் செல்வங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நாடு திரும்பி வருகின்றன.எங்கள் குழுவில், பிரதானமாக 20 பேர் உள்ளனர். அவர்கள் தவிர, 200க்கும் அதிகமான, தன்னார்வலர்கள் உள்ளனர். அவர்களில் பாதிப் பேர் இந்தியர்கள். மீதிப் பேர் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோர். அவர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். எங்கள் பணி நேரம் போக, மீதி நேரத்தை, கலைச் செல்வங்களை மீட்பதில் செலவிட்டு வருகிறோம்.எங்கள் குழுவின் சார்பில், தற்போதைக்கு எனது பெயரும் பணியும் மட்டுமே வெளியில் தெரிகின்றன. மற்றவர்கள், பல்வேறு காரணங்களால் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. இதுகுறித்து எங்கள் குழுவின் இணையதளத்தில், வெளிப்படையாகவே அறிவித்துள்ளோம்.


சமீபத்தில் தீனதயாள் கைது செய்யப்பட்டது தொடர்பாக உங்கள் குழுவினர் என்ன கருதுகின்றனர்?


தீனதயாள் ஒரு அறிவிக்கப்பட்ட குற்றவாளி. அவர் சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரோடு தொடர்பு வைத்திருந்தவர். தீனதயாளைப் போல், கபூரோடு இந்தியா முழுவதும் தொடர்பு வைத்திருந்தோர் பலர். அவர்கள் தங்கள் கலைப் பொருட்கள் விற்பனைக் கூடங்களில், இதுபோல
ஆயிரக்கணக்கான சிலைகளை பதுக்கி வைத்துள்ளனர். இங்கு நம் முன் எழும் கேள்வி, அறிவிக்கப்பட்ட குற்றவாளி ஒருவர், பல ஆண்டுகளாக, ஒரு பெரிய நகரின் மத்தியில், எப்படி இவ்வளவு சிலைகளை பதுக்கி வைத்து இருந்தார்; விற்று வந்தார்; ஏன் இவ்வளவு நாளாக பிடிபடவில்லை என்பது தான்.இதில் வேடிக்கை என்னவென்றால், இவ்வளவு சிலைகளும் திருடு போனது குறித்து ஒரு புகார் கூட பதிவு செய்யப்படவில்லை. நம் வீட்டில் ஒரு பொருள் திருடு போனால் நாம் இப்படி இருப்போமா; ஆனால், நம் நாட்டிற்குள் புகுந்து நம் கடவுள் சிலைகளை திருடிக் கொண்டு செல்கின்றனர். நாம் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.ஏன்? விசாரணை, அது இது என தாம் அலைக்கழிக்கப்படுவோமோ என்ற பயம் தான் காரணம். இதற்கு ஒரு எளிய தீர்வும் உள்ளது. கோவில்களில் உள்ள சிலைகளை, முறையாக புகைப்படம் எடுத்து, ஆவணமாக்க வேண்டும். அதன் ஒரு நகல், அந்தந்த கோவில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருக்க வேண்டும். ஆவணங்களை, பொதுமக்கள் பார்வைக்கு இணையதளத்தில் வைத்து விட்டால், எவரும் சிலைகளை தொடவே அஞ்சுவர். ஆனால், இந்த வேலை இன்னும் நடக்கவில்லை. நாம் இன்னும் செல்ல வேண்டிய துாரம் எவ்வளவோ இருக்கிறது என்பது தான் எங்கள் கருத்து.


தங்களது கலைச் செல்வங்களை மீட்பதில் பிற நாடுகள் எப்படி செயல்படுகின்றன?



தீவிரமாக... மிகத் தீவிரமாக செயல்படுகின்றன. இத்தாலி, கடந்த 25 ஆண்டுகளில் மட்டும் தங்களது மூன்று லட்சம் கலைப் பொருட்களை மீட்டுள்ளது.
இந்தியா, கடந்த, 68 ஆண்டுகளில், வெறும் 17 கலைப் பொருட்களை மட்டுமே மீட்டுள்ளது. இத்தாலி, தனது பாதுகாப்புத் துறையின் கீழ், சிலை கடத்தலை தடுக்க ஒரு தனி அமைப்பையே ஏற்படுத்தி உள்ளது. அதில், 3,000 பேர் பணிபுரிகின்றனர். நவீன கணினி தொழில்நுட்ப வல்லுனர்கள், வழக்கறிஞர்கள், காவலர்கள் என பல துறைகளைச் சேர்ந்தவர்கள் அந்த பிரிவில் உள்ளனர். அவர்களது வேலையே கடத்தலை தடுப்பது மட்டும் தான். இந்த அமைப்பை, கலை, பண்பாட்டுத் துறையின் கீழ் வைக்காமல், பாதுகாப்புத் துறையின் கீழ் வைத்துள்ளது
இத்தாலி. இந்தியாவில், தொல்லியல் துறை மட்டுமே, சிலை கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. மேலும், ஒரு சிலை, இரு சிலைகளை மீட்பது என்ற கதையெல்லாம் இத்தாலியிடம் கிடையாது. யார் திருட்டு சிலைகளை வாங்குகின்றனரோ அவர் மீதே வழக்கு தொடர்ந்து, அவரது தொழிலின் எதிர்காலத்தையே சிதைத்து விடுவது தான் அந்நாட்டு அரசின் பாணி.
உலகளவில் உள்ள பெரிய பெரிய கலைப் பொருட்கள் விற்பனைக் கூடங்களில் தங்கள் நாட்டைச் சேர்ந்த பொருள் விற்பனைக்கு வந்தால், அது கடத்தப்
பட்டது என்பது தெரியவந்தால், கம்போடிய அரசு உடனடியாக அதைத் தடுத்து நிறுத்தி விடும். பின் சிறிது காலத்தில் மீட்டு விடும். மீட்ட பொருட்களுக்கு அந்த நாடு மிகவும் மரியாதை செலுத்தி ஒரு கொண்டாட்டத்தையே நடத்தி விடும். அதேபோல், எகிப்து உள்ளிட்ட நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
ஆனால் இந்தியாவில் அப்படி அல்ல. 10 ஆயிரம் சிலைகளை கடத்திய ராஜஸ்தானைச் சேர்ந்த வாமன் கியா என்ற சிலை கடத்தல் மன்னனை, 'அவன் சிலை கடத்தினான் என்பதற்கு ஆதாரம் இல்லை' என கூறி, 2013ல் அரசு விடுவித்து விட்டது. அவனிடம் இருந்து, இதுவரை ஒரு சிலை கூட மீட்கப்படவில்லை. அடுத்த மூன்று ஆண்டுகளில், அவன் மீது, அரசு தரப்பில் அப்பீல் கூட செய்யப்படவில்லை. இந்தியா, தனது கலைச் செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட்டாலும் அதைப் பற்றி கவலையேபடாது என்ற தோற்றத்தை, இந்த சம்பவம் உலகளவில் ஏற்படுத்தி விட்டது. சுபாஷ் கபூர் வாக்குமூலத்தின் அடிப்படையிலும், இதுவரை ஒரு சிலைகூட மீட்கப்படவில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.சமீபத்தில், 200 சிலைகள் ஒப்படைப்பு முயற்சி கூட, 'இந்தியா பிரைட் புராஜக்ட்' குழுவின் வெற்றி தான். இதை அமெரிக்க அரசே தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறை சிறப்பு விசாரணை அதிகாரி பிெரன்டன் ஈஸ்டர், 'பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனம் போன்ற தனி அமைப்புகள், நிபுணர்கள், ஆவணங்கள், புகைப்படங்களை சேகரித்து தந்திருக்காவிட்டால், சிலைகள் மீட்பு இன்னும் தாமதமாகி இருக்கும்' என்று கூறியிருக்கிறார்.


சிலை கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் அமெரிக்கா எப்படி செயல்படுகிறது?


கடந்த, 2007ம் ஆண்டு ஒரு கன்டெய்னர், கப்பல் மூலம், மும்பையில் இருந்து நியூயார்க்கிற்கு செல்கிறது. அதில் பிரச்னை இருக்கிறது என, இந்திய வருவாய் புலனாய்வு துறை, அமெரிக்க அரசுக்கு தகவல் தெரிவிக்கிறது. நியூயார்க்கில் அந்த கப்பலில் உள்ள கன்டெய்னர் கைப்பற்றப்படுகிறது. அதற்கு முன்பாகவே சுபாஷ் கபூர், அதற்கும் தனக்கும் தொடர்பில்லை என, அறிவிக்கிறான். அதையடுத்து என்ன நடந்தது என வெளியுலகிற்கு தெரியவில்லை. அதிகாரிகள் கன்டெய்னரை திறந்து பார்த்தால், அதில் அவ்வளவும் சிலைகள். யாரும் அவற்றிற்கு உரிமை கோராததால், அமெரிக்காவின் சுங்கத் துறை பாதுகாப்பில் அந்த சிலைகள் வைக்கப்படுகின்றன. கடந்த, 2009ல், சிறப்பு விசாரணை அதிகாரி, பிரென்டன் ஈஸ்டர் விசாரிக்கிறார். சுபாஷ் கபூரின் மேலாளர் ஒருவரை பிடிக்கின்றனர். இரு ஆண்டுகளாக விசாரணை தொடர்கிறது.
அதன் தொடர்ச்சியாக, 2011ல், ஜெர்மனியில், சுபாஷ் கபூர் பிடிபடுகிறான். அந்தளவிற்கு அவர்கள் தீவிரமாக தொடர்ந்து செயல்படுகின்றனர்.



உங்கள் குழுவின் தொடர் நடவடிக்கைகள், கலைப் பொருட்கள் விற்பனை உலகில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன?


இப்போது உலகளவில், இந்திய கலைச் செல்வங்களை ஏலம் விடுவது ஓரளவிற்கு குறைந்துள்ளது என்று கூறலாம். அதுவும், மியூசியங்கள் இந்த விஷயத்தில் தற்போது உஷாராகி விட்டன. ஆனால், கலைச் செல்வங்களை வாங்கும் தனிநபர்களை நாம் கண்காணிக்க முடியாது. அவர்களாகவே முன்வந்து, தாங்கள் வாங்கிய சிலை கடத்தப்பட்டது தான் எனக் கூறி, ஒப்படைத்தால் தான் உண்டு. அப்படித் தான் அமெரிக்காவில் ஒருவர் மாணிக்கவாசகர் சிலையை கொண்டு வந்து கொடுத்தார்.
'வாமன் கியா போல், சுபாஷ் கபூரும் விரைவில் வெளிவந்து விடுவார். நாம் வழக்கம் போல் கடத்தல் சிலைகளை வாங்கலாம்' என, கலைப் பொருட்களை சேகரிக்கும் தனி நபர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.


சிலை கடத்தல் விவகாரங்களில், ஊடகங்கள் எந்தளவுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன?


'தி ஆஸ்திரேலியா' பத்திரிகை, தனது முதல் பக்கத்தில், அர்த்தநாரீஸ்வரர் சிலை குறித்து பெரியளவில் செய்தியை வெளியிட்டது. இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டாலும், போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. சுபாஷ் கபூர் கைது நடவடிக்கை, ஏதோ தமிழகத்தோடு தொடர்புடைய செய்தி என, வடமாநிலங்களில் பார்க்கப்படுகிறது. மோடியிடம் 200 சிலைகள் ஒப்படைக்கப்பட்ட செய்தி, வெறும் செய்தியாக மட்டுமே வந்தது. அதன் பின்னணி என்ன, ஏன் இத்தனை ஆண்டுகள் ஆனது என்பது போன்ற விவரங்களை எல்லாம் எந்த நாளிதழும் வெளியிடவில்லை. அதை வெளியிட்டால் தான், சிலை மீட்பின் அருமை மக்களுக்கு தெரியவரும்.ஸ்ரீபுரந்தான் விநாயகரைப் பொறுத்தவரை முதன்முறையாக, 'தினமலர்' நாளிதழில் தான், 'அமெரிக்காவில் அனாதையாக இருக்கும் விநாயகர்' என்ற செய்தி வெளியானது. அதன் விளைவாக, இன்று அவர் தனது அப்பாவோடு சேர உள்ளார். அம்மாவும் சிங்கப்பூரில் இருந்து வந்தாகி விட்டது. விரைவில், முருகனும் வந்து விடுவார்.

பர்கா தத்...! கார்கில் போரை நேரடியாகப் பதிவு செய்த முதல் இந்தியப் பெண் செய்தியாளர்

மேடம் ப்ளீஸ் ஒரு ஆட்டோகிராஃப்” என்று தன்னிடம் புத்தகங்களை நீட்டுபவர்களுக்கு ‘நைஸ் மீட்டிங் யூ' என்று கையெழுத்திட்டுப் புன்னகைக்கிறார் பர்கா தத்!



மூளையைக் கசக்கி ‘இன்ட்ரோ நரேஷன்' எழுதும் அளவுக்குப் பரிச்சயம் இல்லாதவர் அல்ல பர்கா தத். இந்திய தொலைக்காட்சி ஊடகத்தின் பெண் முகம். ‘யூ ஆர் வாட்சிங் தி பக் ஸ்டாப்ஸ் ஹியர்' என்று அவர் தொலைக்காட்சியில் தெரியும்போது, பல வீடுகளின் வரவேற்பறைகளில் சோஃபாவில் சாய்ந்து அமர்ந்திருப்பவர்கள் நிமிர்ந்து உட்காரும் ‘ஜெஸ்சரில்' தெரிந்துகொள்ளலாம் அவர் நிகழ்ச்சிகளின் முக்கியத்துவத்தை!

அதேபோல ‘வீ த பீப்பிள்' நிகழ்ச்சியில் விவாதத்துக்கு அவர் தேர்வு செய்யும் விஷயங்கள் அத்தனையும் படு சீரியஸ்! நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் விருந்தினர்களை அவர் கையாளும் விதம் அறிவார்த்தமானது!

இத்தனை நாள் பக்கம் பக்கமாகப் பேசிக் கொண்டிருந்தவர் சமீபத்தில் தன் ஊடக அனுபவங்களைப் பக்கம் பக்கமாக எழுதி ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். ‘திஸ் அன்கொயட் லேண்ட்' எனும் அந்தப் புத்தகத்தில், இந்திய தொலைக்காட்சி ஊடகம் விரிவடையத் தொடங்கிய காலம் தொட்டு (1991) இப்போது வரையிலான சமகால இந்திய வரலாற்றை சொல்லிச் செல்கிறார் பர்கா.

முதன்முதலாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போர் கார்கில் போர்தான். அதற்கு முக்கியக் காரணம் பர்கா தத். போரை நேரடியாகப் பதிவு செய்த முதல் இந்தியப் பெண் செய்தியாளர் இவரே! “குண்டுகள் விழ, பதுங்கு குழியில் இருந்துகொண்டு, ஒரே உடை, என சுமார் 15 நாட்கள் ராணுவ வீரர்களோடு போரைப் பதிவு செய்தது எனக்கு நிறைய அனுபவங்களைக் கற்றுத்தந்தது” என்று அவர் சொல்லும்போது நம்மால் அதிசயிக்காமல் இருக்க முடியவில்லை.

சென்னையில் கடந்த வாரம் ‘தி இந்து' நடத்திய ‘லிட் ஃபார் லைஃப்' நிகழ்ச்சிக்கு வந்திருந்த அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து...


பெண்கள், போர், தீவிரவாதம், காஷ்மீர், மத வன்முறை உள்ளிட்ட தலைப்புகளில் உங்கள் புத்தகத்தில் கட்டுரைகள் எழுதியிருக்கிறீர்கள். இவை நீங்களே தேர்வு செய்துகொண்டதா அல்லது உங்கள் அனுபவங்களை எழுத எழுத அந்தத் தலைப்புகளே உங்களைத் தேடி வந்தனவா?

தலைப்புகள் எல்லாம் என்னைத் தேடி வரவில்லை. இந்த விஷயங்களை எல்லாம் எழுத வேண்டும் என்று முடிவு செய்துவிட்டுத்தான் எழுத ஆரம்பித்தேன். தவிர, இந்த விஷயங்களை எல்லாம் நான் ‘ரிப்போர்ட்' செய்திருக்கிறேன். ஆக, எனக்குப் பரிச்சயமான விஷயங்களைத்தான் நான் இதில் எழுதியிருக்கிறேன்.

புத்தகம் எழுத எவ்வளவு காலம் ஆனது?

சொல்லப்போனால் இந்தப் புத்தகம் நான்கு வருடங்களுக்கு முன்பே வந்திருக்க வேண்டியது. ஆனால் தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தேன். கடைசியில் சென்ற ஆண்டு எழுதத் தொடங்கினேன்.



நீங்கள் சிறுமியாக இருந்தபோது பாலியல் துன்புறுத்துலுக்கு ஆளானதைப் பற்றி முதன்முதலாக இந்தப் புத்தகத்தின் மூலம் கூறியிருக்கிறீர்கள். ‘இந்த விஷயத்தைப் பற்றிச் சொல்கிறோமே' என்று பயமோ, தயக்கமோ உங்களுக்கு ஏற்படவில்லையா?

நான் இரண்டு முறை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். ஒன்று நான் சிறுமியாக இருந்தபோது எனது தூரத்து உறவினர் ஒருவரால் நான் 'செக்ஷுவல் அப்யூஸு'க்கு ஆளானேன். அப்புறம், டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு படித்த காலத்தில் என்னுடன் பயின்ற ஒருவரை விரும்பினேன். சில காரணங்களால் எங்கள் இருவருக்குள் வேறுபாடுகள் தோன்றின. அப்போது அவர் என்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டார்.

இந்த இரண்டு விஷயங்களும் என்னுள் ஆழமான காயத்தை ஏற்படுத்தின. பெண்ணுரிமை குறித்து நானே பல நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறேன். பல இடங்களில் பேசியிருக்கிறேன். அப்படியிருக்கும்போது நாம் ஏன் இந்த விஷயத்தைச் சொல்லக் கூடாது என்று நினைத்தேன். நான் செய்தது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. இதை நான் சொல்லாமல் போயிருந்தால் அது எனக்குத்தான் அவமானம். இன்டலெக்சுவலாகவும், எமோஷனலாகவும் நான் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அவ்வளவுதான்!

உங்களுடைய ‘சோர்ஸ்களை' எப்படிப் பிடிக்கிறீர்கள்?

ரொம்பவும் சிம்பிள்! நான் யாரிடம் வேண்டுமானாலும் பேசுவேன். அது பி.ஆர்.ஓ. ஆக இருந்தாலும் சரி. பிரதமர் அலுவலகத்தில் இருப்பவர்கள் ஆனாலும் சரி. நம்முடைய ‘ஸ்டோரி' எவ்வளவு ஸ்ட்ராங் ஆக இருக்கிறது என்பதுதான் முக்கியமே தவிர, நம்முடைய சோர்ஸ் எப்படியிருக்கின்றன என்பதைப் பற்றிக் கவலைப்படக் கூடாது.

இன்றைக்கு ‘சோஷியல் மீடியா' ரொம்ப வலுவாக இருக்கிறதே. அது ‘மெயின்ஸ்ட்ரீம்' ஊடகத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக நினைக்கிறீர்களா?

சோஷியல் மீடியாவால் நிறைய நன்மைகள் ஏற்படுகின்றன. ஆனால் அதே சமயம் நன்மையை விடத் தீமைகள்தான் அதிகமாக இருக்கின்றன. ஒரு விஷயத்தைப் பதிவேற்றியவுடன் உடனே லைக்ஸ், கமென்ட்ஸ், ரீட்வீட்களை மக்கள் எதிர்பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்கள் பிரபலமாக விரும்புகிறார்கள். நாம் பிரபலமாவதற்காகப் பிறக்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இன்றைய டி.வி. ‘ஆங்கரிங்' என்பது ஒரு நிகழ்த்துக் கலை போல ஆகிவிட்டதே...

எப்படிச் சொல்கிறீர்கள்?

ஒரே கூச்சல், விருந்தினர்களைப் பேசவே விடாமல் செய்வது...

என்னுடைய நிகழ்ச்சிகளில் நீங்கள் அதுபோன்ற விஷயங்களைப் பார்க்க முடியாது.

உங்கள் போட்டியாளர்கள்...

அவர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நான் அப்படிச் செய்வதில்லை! நமது அரசியல் கட்சிகள் நம் ஊடகங்களை அமெரிக்கத்தனமாக மாற்றிவிட்டன. ‘அமெரிக்கனை சேஷன் ஆஃப் மீடியா' என்று நான் சொல்வேன். ஒவ்வொரு அரசியல் கட்சியும் டி.வி.யில் தன் சார்பாகப் பேசுவதற்கு ஆட்களை வைத்திருக்கிறது. கட்சிகள் இன்றைய நாட்களில் அதிகளவு ‘மீடியா சென்ட்ரிக்' ஆக வளர்ந்துவிட்டன. ஆனால் குறைந்த அளவே ‘டெமாக்ரடிக்' ஆக இருக்கின்றன.

தமிழகத்தில் அரசால் தொடர்ந்து ஊடகங்கள் மீது அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்படுவதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

அப்படியா? அரசே அவதூறு வழக்குப் போடுகிறதா? அது மிகவும் தவறு. ஊடகங்கள் அரசை விமர்சனம் செய்வது அடிப்படைக் கருத்துரிமை. இதுபோல வழக்குகள் போடுவதால் ஊடகங்களை மவுனமாக்கிவிட முடியாது.

இந்தக் கேள்விக்கு நீங்கள் பலமுறை பதிலளித்திருப்பீர்கள். ஆனாலும் கேட்கிறேன். 2ஜி வழக்கில் உங்கள் பெயர் அடிபட்டதே?

எனது ஊடக வாழ்க்கையில் என்னை ரொம்பவும் காயப்படுத்திய விஷயம் அது. ஏனென்றால் அது என் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கியது. மத வன்முறை, தீவிரவாதத் தாக்குதல் போல 2ஜி விஷயமும் எனக்கு ஒரு ‘ஸ்டோரி' தான். பி.ஆர்.ஓ.க்களிடம் எப்படிப் பேசுவோமோ அப்படித்தான் நீரா ராடியாவுடன் ஸ்பெக்ட்ரம் குறித்து சில தகவல்களைப் பெறுவதற்காகப் பேசினேன். மற்றவர்களைப் போல ராடியாவும் எனக்கு ஒரு ‘சோர்ஸ்' தான். மற்றபடி இன்று வரைக்கும் நான் ராசாவை நேரில் பார்த்ததில்லை.

வளரும் பத்திரிகையாளர்களுக்கு நீங்கள் ஒரு ரோல் மாடல். கிராமத்திலிருந்து வரும் பெண்கள், நகரத்திலிருந்து வரும் பெண்கள்... ஊடகத்தில் யாரால் அதிகம் பிரகாசிக்க முடியுமென்று கருதுகிறீர்கள்?

கிராமம், நகரம் என்பதெல்லாம் முக்கியமல்ல. திறமை இருந்தால் போதும். வேறு எந்த வித்தியாசமும் எடுபடாது! மற்றபடி, பர்கா தத்தைப் போல வரவேண்டுமென்று முயற்சிக்க வேண்டாம். ‘ஜஸ்ட் பீ யுவர்செல்ஃப்!' அதுதான் உங்களை வெற்றி பெற வைக்கும்.

தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் நிகழ்வுகளை வடக்கத்திய ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை என்றொரு குற்றச்சாட்டு இருக்கிறதே...

அது உண்மைதான்! இந்த விமர்சனத்தை எந்த எதிர்ப்பும் இல்லாமல் நான் ஏற்றுக்கொள்கிறேன். அதான் பர்கா தத்!

என் சமூகம் நிம்மதியாக வாழ நான் தீவிரவாதியாக மாறுவதில் எனக்கு எந்த குற்ற உணர்ச்சியும் வரவில்லை

நான் ஒரு தலித் பெண் என்பதால் என்னை என் பெற்றோர்கள் கண்முன்னே ஆதிக்கசாதிகள் வன்புணர்ச்சி செய்தார்கள்.



பிறகு காவல் நிலையத்தில் வைத்து 12 காவலர்கள் வன்புணர்ச்சி செய்தார்கள்..
மீண்டும் என்னை எனது கிராமத்தில் பல பேர் சேர்ந்து வன்புணர்ச்சி செய்தார்கள்.
அப்போதெல்லாம் இந்தியாவில் எந்தவொரு அதிர்வும் ஏற்படவில்லை..

ஒருநாள் என்னை வன்புணர்ச்சி செய்த 12 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்றேன். ஒட்டுமொத்த இந்தியாவும் கொந்தளித்தது.
அனைவரும் என்னை தீவிரவாதி பெண் என்றார்கள். அவர்களைப்பற்றி நான் கவலை கொள்ள வில்லை. காரணம் அதன்பின் தலித் பெண்கள் மீது கை வைக்க ஆதிக்க சாதி ஆண்கள் பயந்தார்கள். அதுதான் எனக்கு தேவை...

என் சமூகம் நிம்மதியாக வாழ நான் தீவிரவாதியாக மாறுவதில் எனக்கு எந்த குற்ற உணர்ச்சியும் வரவில்லை

-போராளி_பூலான்தேவி

தமிழக சிலை கடத்தல்

ஆமை வேகத்தில் தமிழக சிலை கடத்தல் வழக்குகள் ( December 15, 2013)

அரியலூர் மாவட்ட ஐம்பொன் சிலைகள் அமெரிக்கக் கலைக்கூடத்துக்கு கடத்தப்பட்ட வழக்கில் சிக்கி புழல் சிறையில் இருக்கும் சுபாஷ் கபூர், விசாரணைக்காக அவ்வப்போது அரியலூர் நீதிமன்றங்களுக்கு ஆஜராவது தவிர தமிழகத்தில் சிலை திருட்டு வழக்கு கிடப்பிலேயே உள்ளது.

ஆனால் சுபாஷ் கபூரிடம் டாலர்களை கொட்டி சிலை வாங்கிய வெளிநாட்டு அருங்காட்சியகங்கள் சுதாரித்துக்கொண்டு சுபாஷ் மீது வழக்குத் தொடுக்க ஆயத்தமாகியுள்ளன.

கபூருக்கு உதவிய சஞ்சீவி

கேரள பூர்வீகத்தோடு தமிழகத்தில் சுற்றிக்கொண்டிருந்த சஞ்சீவி அசோகன் தொடர்பு கிடைத்ததும் கபூரின் கனவு நனவானது. அரியலூர் கிராம கோவில்களில் இருந்து சஞ்சீவி மூலமாக அமெரிக்காவில் இருக்கும் கபூரின் கைக்கு ஐம்பொன் சிலைகள் சென்று சேரும். நிம்பஸ் எக்ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் கபூர் ஆரம்பித்த ஏற்றுமதி நிறுவனம் மூலமாக தமிழகத்தின் கைவினைப்பொருட்கள் குவியலில் இந்த ஐம்பொன் சிலைகளும் பக்காவாக மறைத்து வைக்கப்பட்டு கடல் கடந்தன.

கபூரின் ‘ஆர்ட் ஆஃப் தி பாஸ்ட்’ கடை செழித்தது. நிழல் வர்த்தகம் தந்த வருமானம், அமெரிக்காவை அடுத்து இங்கிலாந்து ஹாங்காங், துபாய், ஜெர்மனி, தாய்லாந்து ஆகிய நாடுகளில் எல்லாம் கலைப்பொருள் விற்பனை என்ற பெயரில் கடை விரிக்க வைத்தது. மெய்நிகர் உலகத்திலும் கடைவிரிக்கும் ஆசையில் ஒரு இணையதளம் ஆரம்பித்தபோது, சர்வதேச மாஃபியாக்களை மோப்பமிடும் இன்டர்போல் மூக்கில் வேர்க்க வைத்தது.

கைமாறிய பணம்

இன்டர்போல் அறிவுறு த்தலில் கபூர் கடையும் கணக்குவழக்குகளையும் அமெரிக்க போலீஸார் ஆராய ஆரம்பித்தனர். அமெரிக்க கபூரின் கணக்கிலிருந்து சென்னை சஞ்சீவி அசோகன் கணக்குக்கு கோடிக்கணக்கில் பணம் போனதும் இன்டர்போல் சுதாரித்தது. இப்படியான வேட்டை தமிழக போலீஸாரை அரியலூரில் வந்து நிறுத்தியது.

சிலை கடத்தல் தொடர்பாக 2011 அக். 30-ல் சுபாஷ் கபூர் ஃபிராங்க்பர்ட்டில் கைதானார். தமிழக போலீஸார் ஜெர்மனி சென்று கபூரை அழைத்துவந்தனர். களத்தில் இறங்கிய தமிழக சிலை தடுப்புப் பிரிவு போலீஸார் கபூர் கைக்கு போன சிலைகளின் புள்ளி விவரத்தை சேகரிக்க ஆரம்பித்தனர்.

கபூர், சஞ்சீவி கணக்கில் வரவு வைத்த தொகைகள் மட்டுமே ரூ.1,16,37,694 மற்றும் 1,01,10,418 என தெரியவந்திருக்கிறது. அப்படியெனில் திருடப்பட்ட விக்கிரங்களை விற்ற வகையில் கபூர் பார்த்த கோடிகள் ஏராளம். தற்போதைய விசாரணையில் இருக்கும் சுத்தமல்லி ஸ்ரீபுரத்தான் சம்பவங்கள் 2008-ல் நடந்தது. அதற்கு முந்தைய கபூரின் சிலை கடத்தல் கண்ணிகளில் கை வைத்தால் எங்கெங்கோ வெடிக்கும் என்கிறார்கள்.

புராதன சிலைகள் பறிமுதல்

ஆனால் அமெரிக்காவில் கபூர் குடும்பம் போலீஸ் கண்காணிப்பிலேயே இருக்கிறது. அங்கு மேடிசன் அவென்யூ 89வது தெருவில் இருக்கும் கபூரின் கலைக்கூடத்தை நிர்வகித்து வந்த அவரது சகோதரி சுஷ்மா சரீன் மற்றும் மகள் மம்தா சாகரை மடக்கிய அந்நாட்டு போலீஸார் அவர்கள் மறைத்து வைத்திருந்ததாக 4 ஐம்பொன் சிலைகளை கைப்பற்றி இருக்கிறார்கள்.

இவற்றின் மதிப்பு சுமார் 14.3 மில்லியன் டாலர்களாம். கைப்பற்றபட்டவை அரியலூரின் சோழர்காலத்து புராதன சிலைகள் எனத் தெரிகிறது.

நியூயார்க் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் சுபாஷ் கபூர் குடும்பத்தினர் தொடர்பான சிலைக் கடத்தல் வழக்கில், கபூரிடமிருந்து ஆறு சிலைகளை ஆஸ்திரேலியாவிலுள்ள நியூ சவுத் வேல்ஸ் அருங்காட்சியகம் வாங்கியிருக்கும் தகவல் வெளியானது. இதையடுத்து விருத்தாசலம் பகுதியிலிருந்து இருந்து கடத்தப்பட்டதாக சொல்லப்படும் அரத்தநாரீஸ்வரர் சிலை அருங்காட்சியக பார்வையிலிருந்து அதன் நிர்வாகம் அகற்றி இருக்கிறது. தொடர்ந்து மீதமுள்ள ஐந்து சிலைகளை அடையாளம் காணும் பணியையும் தொடங்கியிருக்கிறது. இது தொடர்பாக சுபாஷ் கபூர் மற்றும் அவரது நிறுவனம் மீது வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்திருக்கிறது.


இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 200 சிலைகள் மோடியிடம் ஒப்படைப்பு தமிழக கோவில்களில் திருடப்பட்ட சிலைகளையும் அமெரிக்கா வழங்கியது (
புதன், ஜூன் 08,2016)


இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 200 சிலைகளை பிரதமர் நரேந்திர மோடியிடம் அமெரிக்கா வழங்கியது. 

வாஷிங்டன்,

தமிழகத்தின் பழமையான கோவில்களில் இருந்து திருடப்பட்ட ஐம்பொன், வெண்கல சாமி சிலைகள் அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்டன. 

அங்கு இந்த சிலைகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் சிலைகள் திருட்டும், கடத்தலும் தொடர்ந்தது.

சுபாஷ் கபூர்

இதுபோல் இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழக கோவில்களின் சாமி சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்டன. 

சிலை கடத்தலில் ஈடுபட்ட சுபாஷ் கபூர் என்பவர் அமெரிக்காவில் ஒரு விற்பனைக் கூடமே அமைத்து சாமி சிலைகளை விற்பனை செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த சுபாஷ் கபூர், ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் 2011-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

முறைப்படி ஒப்படைப்பு

அமெரிக்காவுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்யப்பட்ட சாமிசிலைகள் தற்போது பிரதமர் மோடி மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக திரும்ப பெறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 3 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியிடம் அமெரிக்க அரசு, தான் மீட்ட சிலைகளை நேற்று முன்தினம் முறைப்படி ஒப்படைத்தது. 

இதற்கான நிகழ்ச்சி, வாஷிங்டன் நகரில் உள்ள அமெரிக்க விருந்தினர் இல்லமான பிளேர் ஹவுசில் நடந்தது. அப்போது 10 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.650 கோடி) மதிப்புள்ள 200 சிலைகளை இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைத்தது. இவற்றில் பெரும்பாலானவை, ஐம்பொன், வெண்கல சிலைகள், டெரகோட்டா பொம்மைகள் மற்றும் கற்சிலைகள் ஆகும். இவற்றில் சில 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை.

மாணிக்கவாசகர் சிலை ரூ.10 கோடி

இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைத்த சிலைகளுடன் தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த விநாயகர் சிலை, கி.பி. 850-1250 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட சோழர் காலத்தைச் சேர்ந்த துறவி மாணிக்கவாசகர் வெண்கல சிலை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இதில் மாணிக்கவாசகர் சிலையின் மதிப்பு மட்டும் ரூ.10 கோடி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலைகளை திரும்பப் பெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார். 


மிகப்பெரிய இணைப்பு

சிலைகள் ஒப்படைப்பு இந்தியா-அமெரிக்கா இடையேயான கலாசார உறவில் மிகப்பெரிய இணைப்பை ஏற்படுத்துவதாக அமைந்து இருக்கிறது.

இந்திய கோவில்களில் திருடி கடத்தப்பட்ட கலாசார சிறப்புவாய்ந்த சாமி சிலைகளை கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு நாடுகள் இந்தியாவிடம் ஒப்படைத்து வருகின்றன. இதில் சம்பந்தப்பட்ட இரு நாடுகளும், அவைகளின் விசாரணை முகமைகளும் சிலை கடத்தலில் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்படுகின்றன. இவை, சாமி சிலை கடத்தலை தடுப்பது மட்டுமின்றி அவற்றை தங்களின் தாயகத்துக்கு திருப்பி அனுப்பி வைத்தும் வருகின்றன.

ஒபாமாவுக்கு நன்றி

இந்த பொக்கிஷங்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிவைப்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு மிக்க நன்றி. இதன் மூலம் எங்களின் கடந்த காலம் எங்களுடன் இணைந்து இருக்கிறது. சிலர் இந்த கலைப்பொருட் களை பணரீதியாக மதிப்பீடு செய்யலாம். அவை பல லட்சம் இருக்கும் என்றும் கூறலாம். 

எங்களைப் பொறுத்தவரை எங்களின் கடந்த கால கலாசாரமும், பாரம்பரியமும் எங்களுடன் இணைந்து இருக்கிறது. எங்களின் மதிப்பை உயர்த்தி உள்ளது.

சுற்றுலா பயணிகள் 

சுற்றுலா வரும் பயணிகள் நவீன வசதிகள் கொண்ட இடங்களுக்கு மட்டுமே செல்ல விரும்புவதில்லை. இதுபோன்ற கலாசார, வரலாற்று சிறப்புமிக்க இடங்களையும் (கோவில்கள்) பார்க்க வருகின்றனர். ஏனென்றால் இந்தியாவின் பண்டைய நாகரிகம் அவர்களை ஈர்க்கிறது. 

5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்துசமவெளி நாகரிக நகரங்களைக் காண்பதற் காக சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு அதிக அளவில் வருகிறார்கள். இந்த பொக்கிஷங்கள் உலகம் முழுவதையும் ரசிக்க வைக்கிறது. இன்றைய தொழில்நுட்பம் சட்டவிரோதமாக சிலைகளை கடத்துவோரை பிடிக்க உதவியாக இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

அமெரிக்காவுக்கான இந்திய தூதர் அருண் கே.சிங் கூறும்போது, ‘‘இந்நிகழ்ச்சியின்போது 12 சிலைகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. மற்ற சிலைகளும் விரைவில் முறைப்படி பெறப்படும்” என்றார். 

மோடி அஞ்சலி

முன்னதாக நேற்று முன்தினம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றடைந்ததும், தனது பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக வாஷிங்டன் நகரில் உள்ள ஆர்லிங்டன் தேசிய கல்லறைக்கு சென்றார். 

அங்கு, கொலம்பியா விண்கலம் வெடித்து சிதறிய விபத்தில் 2003-ம் ஆண்டு பலியான இந்திய வம்சாவளி வீராங் கனை கல்பனா சாவ்லா மற்றும் 6 விண்வெளி வீரர்களுக்கு நினைவிடம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் கல்பனா சாவ்லா குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். 

தமிழகத்தைச் சேர்ந்த 3 சிலைகள் அமெரிக்காவில் மீட்பு: கோயில் விவரத்தை பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் கண்டறிந்தது(January 23, 2016)

தமிழகத்தைச் சேர்ந்த 3 கடவுள் சிலைகள் அமெரிக்காவில் மீட்கப் பட்டுள்ளன. இச்சிலைகள் காணா மல்போன கோயில்கள் பற்றிய விவரத்தை புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தினர் கண்டறிந்துள்ளனர்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகளவில் பாரம்பரிய கோயில்கள் உள்ளன. கிராமப் பகுதிகளில் உள்ள பல கோயில் களில் இருந்த ஐம்பொன் சிலை கள் மற்றும் கற்சிலைகள் வெளி நாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன. சிலைக் கடத்தல்காரர்களை கண்ட றிந்து சிலைகளை போலீஸார் மீட்ப தற்கு புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் முக்கிய உதவிபுரிகிறது.

தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம் மற்றும் பல ஊர்களில் உள்ள பழ மையான கோயில்கள், வடமாநில கோயில்களில் பிரெஞ்சு ஆய்வு நிறுவனக் குழு ஆய்வு நடத்தி புகைப்படங்களை சேகரித்துள்ளது. இங்கு, சுமார் 1.5 லட்சம் திருக் கோயில் சிலைகள் தொடர்பான புகைப்படங்கள் உரிய ஆதாரங் களுடன் உள்ளன. கடந்த 1956-ல் தொடங்கிய இப்பணி தற்போது வரை தொடர்கிறது.

பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தி லுள்ள புகைப்படத்தை ஆதாரமாக கொண்டுதான் தமிழகத்தின் புரந்தன் கிராமத்தில் இருந்து கடத்தப்பட்ட நடராஜர் சிலை, ஆஸ்திரேலியா நாட்டின் நேஷனல் கேலரியில் இருப்பது தெரிந்தது. இந்த கோயிலில் இருந்து கடத்தப்பட்ட உமாமகேஷ்வரி சிலை சிங்கப்பூரில் உள்ள அருங்காட்சி யகத்தில் உள்ளது தெரிந்தது. இக்கோயிலில் இருந்து 25-க்கும் மேற்பட்ட சிலைகளை சுபாஷ் சந்திர கபூர் தலைமையிலான கும்பல் கடத்தி அயல்நாடுகளில் விற்றது தெரிந்தது. சுபாஷ் கைதானதும் நடராஜர் உள்ளிட்ட சிலைகள் மீட் கப்பட்டன. இந்த கோயிலில் இருந்து திருடப்பட்ட வெண்கலத்தினாலான மாணிக்கவாசகர் சிலையும் அண்மையில் மீட்கப்பட்டது.

அமெரிக்க போலீஸ் தகவல்

இதுபோல, அமெரிக்காவி லுள்ள குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ஐசிஇ) தரப்பானது கடந்த 3 ஆண்டுகளாக செய்து வந்த விசாரணையில் ஏராள மான சிலைகளை கைப்பற்றியுள் ளன. இந்நிலையில், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை யைச் சேர்ந்தோர் தற்போது தமி ழகத்திலுள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சில சிலைகளின் புகைப்படங்களை அளித்தனர். அதையடுத்து அந்த குழுவினர் புகைப்படங்களிலுள்ள சிலைகள் அனைத்தும் எந்த கோயிலைச் சேர்ந்தவை என்பதை கண்டறியு மாறு புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பினர்.



தற்போது, அவற்றில் கணபதி, பைரவர், நர்த்தன சம்பந்தர் ஆகிய 3 கற்சிலைகளின் விவரங் கள் தெரியவந்துள்ளன. இதுதொடர் பாக புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவன வட்டாரங்கள் ‘தி இந்து’ விடம் கூறும்போது, “அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை யைச் சேர்ந்த (US Department of Homeland Security) வல்லுநர்கள் கடந்த ஆண்டு புதுச்சேரிக்கு வந்து சிலைகளின் புகைப்படங்களை ஆய்வு செய்த னர். தற்போது இதேபோல மற் றொரு குழுவினர் தங்கள் வசமுள்ள சிலைகளின் புகைப்படங்களை தமிழகத்துக்கு தந்துள்ளனர். தமி ழகத்தில் இருந்து உயர் அதிகாரிகள் தந்த புகைப்படங்களை ஆதாரமாக கொண்டு ஆவணங்கள் மற்றும் சிலைகளுடன் ஒப்பீடு செய்தோம். அப்போது, அந்த சிலைகள் விழுப் புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை சேந்தமங்கலத்திலுள்ள ஆபத் சகாய ஈஸ்வரன் கோயிலில் இருந்து காணாமல் போனவை என தெரிந்து தகவல்களை உறுதி செய்துள்ளோம். இனி இதுதொடர் பாக தமிழக சிலை கடத்தல் பிரிவினர் உரிய நடவடிக்கை எடுப்பர்" என்று குறிப்பிட்டனர்.

சென்னை தொழில் அதிபர் தீனதயாளன், திருட்டு சிலைகளை வாங்கியது அம்பலம்


தொழில் அதிபர் தீனதயாளன் கோவில்களில் திருடப்பட்ட சிலைகளை சட்டவிரோதமாக வாங்கி தனது வீட்டில் பதுக்கி வைத்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கோவிலில் திருடப்பட்ட சிலைகளை அறநிலையத்துறை அதிகாரிகள் அடையாளம் காட்டினார்கள்.

அதிகாரிகள் ஆய்வு

தொழில் அதிபர் தீனதயாளன் வீட்டில் போலீசார் மீட்டுள்ள சிலைகளில் கோவில்களில் திருடப்பட்ட சிலைகள் உள்ளதா? என்று அறநிலையத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்து வருகிறார்கள். நேற்று 3-வது நாளாக ஆய்வுப்பணி நடந்தது. 

கோவை, நெல்லை, மதுரை, சிவகங்கை ஆகிய மண்டலங்களில் இருந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று தீனதயாளன் வீட்டிற்கு வந்திருந்தனர். ஏராளமான கோவில் பூசாரிகளும் தீனதயாளன் வீட்டில் கூடிவிட்டார்கள். இதனால் கூட்டம் அலைமோதியது. தங்கள் பகுதிகளில் உள்ள கோவில்களில் திருட்டுப் போன சிலைகள் தீனதயாளன் வீட்டில் இருக்கிறதா? என்று ஆய்வு செய்தனர்.

2 சிலைகள் கண்டுபிடிப்பு

நேற்று காலையில் தொடங்கிய இந்த ஆய்வு பணி மாலை வரை நீடித்தது. நேற்று முன்தினம் திருச்சி மண்டல அறநிலையத்துறை அதிகாரி கல்யாணி அவரது பகுதியில் உள்ள 2 கோவில்களில் திருட்டு போன சிலைகள் தீனதயாளன் வீட்டில் இருப்பதை கண்டுபிடித்தார். திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகாவில் உள்ள முல்லால் கிராமத்தில் உள்ள சிவலோகநாதர் கோவிலில் 10 வருடங்களுக்கு முன்பு சிவகாம சுந்தரி அம்மன் சிலை திருட்டு போய்விட்டது. இதேபோல பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவில் இருக்கும் அயன்பேரையூர் கிராமத்தில் உள்ள திருமுக்தீஸ்வரர் கோவிலில் கடந்த 2011-ம் ஆண்டு பிரம்மாவின் சிலையும் திருட்டு போய்விட்டது. 




இந்த 2 சிலைகளும் தீனதயாளன் வீட்டில் மீட்கப்பட்டுள்ள சிலைகளில் இருப்பதை அதிகாரி கல்யாணி அடையாளம் காட்டினார். இதன்மூலம் கோவில்களில் திருடப்பட்ட சிலைகளை தீனதயாளன் சட்டவிரோதமாக வாங்கி பதுக்கி வைத்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகளின் ஆய்வுப்பணி நடைபெற்று வருகிறது.

கைதாவாரா?

தீனதயாளன் வீட்டில் மீட்கப்பட்டுள்ள சிலைகளை மத்திய மாநில தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டுள்ளனர். இந்த சிலைகள் பழங்கால சிலைகள் தானா? என்பது பற்றி தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகள் அறிக்கை கொடுக்க வேண்டும்.

தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகளின் இந்த ஆய்வுஅறிக்கைக்காக போலீசார் காத்திருக்கிறார்கள். இந்த ஆய்வுஅறிக்கை கிடைத்தவுடன் போலீசார் அடுத்த கட்ட கைது நடவடிக்கையில் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


தற்போது தீனதயாளன் வீட்டில் பணிபுரிந்த 3 ஊழியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அடுத்தகட்டமாக தீனதயாளனும், அவருக்கு துணையாக இருந்த அதிகாரிகளும், முக்கிய பிரமுகர்களும் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

தீனதயாளன் வீட்டில் குவிந்த 100 பூசாரிகள்: 285 சிலைகளையும் அடையாளம் காணும் பணி தீவிரம்

சென்னை ஆழ்வார்பேட்டையில் 3 இடங்களில் 285 சிலைகளை பதுக்கி வைத்திருந்த சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் கடந்த மாதம் 31-ந்தேதி, ஐ.ஜி. பொன் மாணிக்கவேலிடம் சரண் அடைந்தார்.

அவரது கூட்டாளிகளான மான்சிங், ராஜா, குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தீனதயாளனை மட்டும் போலீசார் கைது செய்யவில்லை. தொடர்ந்து 17 நாட்களாக தீனதயாளனிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிலை கடத்தலில் பின்னணி பற்றியும், உடந்தையாக இருந்தவர்கள் யார்-யார்? என்பது பற்றியும் அவரிடம் பல்வேறு தகவல்களை போலீசார் திரட்டியுள்ளனர்.

தீனதயாளனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 285 சிலைகளையும் அடையாளம் காணும் பணியில் போலீசாரும், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வந்த செய்திகளை பார்த்து தங்களது பகுதிகளில் உள்ள கோவில்களில் காணாமல் போன சிலைகள் தீனதயாளனின் வீட்டில் உள்ளதா? என்பது பற்றி தெரிந்து கொள்வதற்காக தினமும் பல்வேறு ஊர்களில் இருந்தும் கோவில் நிர்வாகிகள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் கோவில் நிர்வாகிகள், பூசாரிகள் ஆகியோர் தீனதயாளனின் வீட்டுக்கு இன்றும் வந்திருந்தனர்.

சேலம், திருச்சி, புதுக்கோட்டை, திருக்கோவிலூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்தவர்கள் கோவில்களின் பெயர் மற்றும் காணாமல் போன சிலைகள் ஆகியவற்றின் பெயர்களை கூறி போலீசாரிடம் பதிவு செய்தனர்.

புதுக்கோட்டை மஞ்சக்குடியில் உள்ள விஸ்வநாதர் சாமி கோவிலில் 10 சிலைகள் காணாமல் போயிருப்பதாக அங்கிருந்து வந்தவர்கள் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் சூரியனார் சிலை ஒன்றும், கரூர் கிருஷ்ணாபுரம் அம்மன் கோவிலில் பிடாரி சிலை ஒன்றும் புதுக்கோட்டை கஞ்சனூர் அகஸ்தீஸ்வரர் கோவிலில் ஒரு சிலையும் காணாமல் போயுள்ளது. இக்கோவிலின் நிர்வாகிகளும் தீனதயாளனின் வீட்டுக்கு வந்திருந்தனர்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த மடங்களில் ஓவியங்களும் காணாமல் போய் உள்ளன. இந்த ஓவியங்களை அடையாளம் காணவும் அப்பகுதிகளில் இருந்து மடங்களின் நிர்வாகிகளும் வந்திருந்தனர். இதனால் தீனதயாளன் வீடு இருக்கும் முர்ரேஸ் கேட் சாலை பகுதி இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.

இன்று ஒரே நாளில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட கோவில் நிர்வாகிகளும், பூசாரிகளும், மாயமான எங்க ஊரு சாமி சிலைகள் திரும்ப கிடைக்குமா? என்கிற ஏக்கத்துடன் குவிந்திருந்தனர். இவர்கள் அனைவரும் காணாமல் போன சாமி சிலைகளின் பழைய போட்டோக்கள் மற்றும் அந்த சிலைகள் பற்றிய தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தனர்.

இவைகளை குறித்து வைத்துக் கொண்ட போலீசார், உங்கள் பகுதியில் காணாமல் போன சிலைகள், தீனதயாளனின் வீட்டில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அது நிச்சயமாக திருப்பி ஒப்படைக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

இப்படி சிலைகளை அடையாளம் காணும் பணி ஒரு பக்கம் தீவிரம் அடைந்து கொண்டிருக்கும் நிலையில், தீனதயாளன் சென்னை மற்றும் பெங்களூரில் மேலும் சிலைகளை பதுக்கி வைத்திருப்பதையும் போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.

இது தொடர்பாக அந்த இடங்களில் சோதனை நடத்துவதற்காக கோர்ட்டில் அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த அனுமதி கிடைத்ததும் சென்னை மற்றும் பெங்களூரில் தீனதயாளன் பதுக்கி வைத்துள்ள சிலைகளும் பறிமுதல் செய்யப்படும்.

இதற்கான சோதனையில் போலீசார் விரைவில் ஈடுபட உள்ளனர். இதற்காக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம் தலைமையிலான போலீசார் விரைவில் பெங்களூர் செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்த சோதனைக்கு பின்னர் தீனதயாளன் பற்றி மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்து அற நிலையதுறை அதிகாரிகள் இன்று 2-வது நாளாகவும் தங்களது ஆய்வு பணியை தொடர்ந்தனர்.